கண்டி மாவட்டத்தில் 143 எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிகிச்சை

108 0

ண்டி மாவட்டத்தில் 143 பேர் எச்.ஐ.வி. தொற்று காரணமாக தொடர்ந்து வைத்திய சேவையை பெற்று வருவதாக கண்டி மாவட்ட எச்.ஐ.வி. தடுப்புப் பிரிவின் பிரதானி, வைத்தியர் எம்.ஐ.எம். லரீப் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) இடம்பெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றின்போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கண்டி மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் மேற்படி தொற்று அதிகரித்து வருகிறது.

1991ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி, கண்டி மாவட்டத்தில் 268 பேர் எச்.ஐ.வி. தொற்றாளர்களாக பதிவாகி இருந்தது. அதில் 143 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகுதிப் பேர் இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம்.

2021ஆம் ஆண்டு 20 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டனர். 2022ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 15 பேர் புதிதாக இனங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் 24 முதல் 40 வரையான வயதுப் பிரிவினர் ஆவர்.

2021ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட 20 பேரில் 17 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர்.

கண்டியில் இதுவரை சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 வயதிலும் குறைவானவர்களாக 13 பேர் உள்ளனர்.

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானவர்கள் முறையற்ற பாலியல் தொடர்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் அனேகர் போதைக்கு அடிமையானவர்கள்.

மேலும், இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மனைவிமார்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, எய்ட்ஸ் பற்றி ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் கண்டி வைத்தியசாலையில் உள்ள பாலியல் தொற்று நோய் தொடர்பான சிகிச்சை பிரிவுக்கு சமுகமளித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.