வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை பெற தயார் இல்லை என கிளிநொச்சி மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுப்பதாக கூறிய சர்ச்சை தொடர்பிலும், அமைச்சர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பான சர்ச்சை தொடர்பிலும் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”எங்களின் உறவுகளை நாங்கள் 13 வருடங்களாக தேடி அலைந்து கொண்டிருக்கின்ற வேலையில், எமது உறவுகள் எவரும் உயிருடன் இல்லை என்றும் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாகவும் சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார்.
எங்களுக்கு அந்த இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு தேவையில்லை. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் குறித்த இழப்பு தேவையாக இருந்தால், இலங்கை அரசாங்கத்திடம் அந்த இழப்பீட்டு தொகையை பெற்று அவர் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கலாம்.
இதே போன்று கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் OMB அலுவலகங்களை கொழும்பில் இருந்து வந்து பதிவு செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் யாரை பதிவு செய்கின்றார்கள் என்பது இதுவரையில் எங்களுக்கு தெரியாது.
எங்களுடைய உறவுகளுக்கு நாங்கள் கூறிக்கொள்வது என்னவென்றால், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு என்று கூறி பதிவு செய்தவுடன் வெறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார்கள். அவ்வாறு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் கொடுத்ததாக கணக்கு காட்டலாம்.
எனவே 13 வருடங்களாக எமது உறவுகளை தேடி திரிந்து கொண்டிருக்கின்றோம். அந்த வேலையில் இந்த ஆயிரம் ரூபாய்க்காக நீங்கள் கையேந்த வேண்டாம். என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
நமக்கு காணாமல் போன உறவுகள் தான் தேவை, என்பதை மீண்டும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைப்பு ஒன்று எமது பதிவுகளை எடுத்து அந்த பதிவுகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்வதாக கூறி தகவல்களை திரட்டுகின்றார்கள். ஆனால் அது உண்மையானது அல்ல. எனவே எமது உறவுகள் மிகுந்த அவதானமாக இருங்கள். யார் வந்து எந்த தகவலை கேட்டாலும் கொடுக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.