தமிழருடனான அரசியல் கிளிதட்டில் ரணிலின் மூன்றாவது ‘ரவுண்ட்’

194 0

2002 முதல் இரண்டு ஆண்டுகள் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், 2015 முதல் நாலரை ஆண்டுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தேநிலவு கழித்தும் தமிழரை ஏமாற்றி அனுபவப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கிளிதட்டு விளையாட்டின் மூன்றாவது ‘ரவுண்ட்’ ஆரம்பமாகியுள்ளது.

ஒவ்வொரு வருடம் முடியும் வேளையிலும், புத்தாண்டு பிறக்கும் போதிலும் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று கூறிக்கொள்வது ஒரு மரபாக உள்ளது.

இலங்கைத் தமிழரது பிரச்சனைகளின் தீர்வைப் பொறுத்தளவில் இது பொருத்தப்பாடுடையதாக தெரியவில்லை. ஷசுத்திச் சுத்தி சுப்பற்ரை கொல்லைக்குள்| என்பதுபோல பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், சந்திப்புகள், இணக்கப்பாடுகள், அவநம்பிக்கைகள், ஏமாற்றுகள் என்பவை தொடர்கதையாக, மீண்டும் மீண்டும் பழைய இடத்துக்கே மீண்டு வருவதே வழக்கமாகிவிட்டது.

இலங்கை அரசியலில் இப்போது இரண்டு விடயங்கள் முதன்மை பெற்றுள்ளன. இவை இரண்டுமே எதிர்பார்ப்பது போன்று நிறைவு பெறுமா என்பது கேள்விக்குறிதான்.

இன்னமும் மூன்று மாதங்களுக்குள் – எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடைபெற வேண்டிய உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தலுக்கு இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் நியமன தாக்குதல் அறிவிப்பு வருமென கூறப்பட்டது.

அதேசமயம், உள்ளூராட்சிச் சபைகளின் எல்லைகளை மீள்வரைபு செய்வது ஏற்பாடாகி வருகிறது. அத்துடன் நாடு முழுவதுமுள்ள 8,000 வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,000 வரையாக – அதாவது ஐம்பது வீததத்தால் குறைக்க வேண்டுமென ரணில் ஏற்கனவே விடுத்த அறிவிப்பு காத்திருக்கிறது. அதுமட்டுமன்றி உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அந்தந்த மாகாண சபைகளை மாற்றியமைக்கும் தமது எண்ணத்தையும் ஏற்கனவே ரணில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான பல்வேறு கருத்துரைப்புகளை கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது, உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் மார்ச் மாதத்துக்குள் நடைபெறுமென நிச்சயமாகச் சொல்ல முடியாது. ரணிலை ஆதரித்து நிற்கும் பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர்கூட இத்தேர்தலை நடத்துவதற்கு அனுகூலமாக இல்லை.

இது ஒருபுறமிருக்க, எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தீர்வு காணவென ரணிலினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் கூட்ட முயற்சியும் தடம் மாறி ஓடுவது போன்று காட்சி தருகிறது.

வடக்கின் தமிழர் பிரதிநிதிகளுடன் என்று முதலில் அழைக்கப்பட்ட இக்கூட்டம், மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்ற பின்னர், அடுத்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக மாற்றம்பெற்றது.

இதன் முதற்கூட்டம் கடந்த 13ம் திகதி இடம்பெற்றது. அரசியல் கைதிகள் விடுதலை, படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி என்ற பதவி வழியாக நேரடியாகக் கையாண்டு அடுத்த மாதத்துக்குள் (ஜனவரி) தீர்வை முன்வைப்பார் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்திலும், அரசியலமைப்பிலும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவது (?) தொடர்பில் அடுத்த மாதத்தில் பேசி தீர்மானிப்பது என்றும் இங்கு முடிவு காணப்பட்டது.

முடிவு காணப்படாத விடயமும், நம்பிக்கையற்ற முடிவெடுக்கப்பட்ட விடயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொதுவெளியில் இதனை உரத்துப் பேசி வந்த தமிழர் தரப்பு கூட்டத்தில் பெட்டிப்பாம்பாக மாறியது. இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றி முன்னர் பல தடவை பேசியாகி வி;ட்டதால், எந்த அடிப்படையில் தீர்வு காணலாமென பின்னர் ஆராயலாமென்பது ஏக முடிவு. வசதி கருதி மறந்தவர்கள் போன்று தமிழர் தரப்பினர் இவ்விடயத்தில் செயற்பட்டது ஏமாற்றம் தருவது.

நிலைமை இவ்வாறு கவலைக்குரியதாக இருக்கும்போது, முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் வேறு வேசத்தில் மீண்டும் களமிறக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் முதலில் மனோ கணேசனையும் பின்னர் சம்பந்தனையும் சுமந்திரனையும் இவர் சந்தித்து உரையாடினார்.

சில மாதங்களுக்கு முன்னர் எரிக் சொல்கெய்மை காலநிலை மாற்றத்துக்கான விசேட ஆலோசகராக ரணில் நியமித்தபோதே பலருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தின் ஆலோசகராக வந்தவர், தமிழரின் அரசியல் காலநிலைக்கான ஆலோசகராக எவ்வாறு மாறினார் என்பது வியப்புத் தருவது.

சில மாதங்களுக்கு முன்னர் தமது தாய்மாமனின் மகனும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான றுவான் விஜேவர்த்தனவை காலநிலை ஆலோசகராக ரணில் நியமித்தது ஞாபகமிருக்கலாம். இதற்கும் மேலாக இன்னொரு காலநிலை ஆலோசகராக எரிக் சொல்கெய்ம் நியமிக்கப்பட்டது ரணிலைப் பொறுத்தவரையில் தேவையானதாக இருந்தது. எரிக்கின் வருகை ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும் அவர் தற்போதைய பேச்சுவார்த்தையில் தாம் அனுசரணையாளராக இடம்பெறப் போவதில்லையென்று சொல்லி தப்பிக்க முனைந்துள்ளார்.

அவர் என்னதான் சொன்னாலும், ரணிலின் தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சியில் மறைமுகமாக முக்கிய சில நாடுகளின் கருத்தாளராகவும் அவதானிப்பாளராகவும் இவர் இருப்பாரென்பது அனைவருக்கும் தெரிந்தது. இதன் தொடராகவே கடந்த 21ம் திகதி சம்பந்தனையும் சுமந்திரனையும் திடீரென ரணில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை அனுமானிக்க முடிகிறது.

ஜனவரியில் மீண்டும் சந்திப்போமென்று முன்னைய கூட்டத்தில் அறிவித்த ரணில், 21ம் திகதி அவசரமாக இச்சந்திப்பை நடத்த வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மனோ கணேசனையும், சம்பந்தன் – சுமந்திரனையும் சந்தித்து பேசிய எரிக் சொல்கெய்ம் தமிழர் தரப்பில் சி.வி.விக்னேஸ்வரனையும், சித்தார்த்தனையும், செல்வம் அடைக்கலநாதனையும் சந்திக்காது தவிர்த்துக் கொண்டது ஏன்? 13ம் திகதி இடம்பெற்ற கூட்டத்துக்கு மற்றைய தமிழ் தலைமைகளுக்கான அழைப்பை ஜனாதிபதி செயலகம் ஏன் முறைப்படி விடுக்கவில்லை?

சுமந்திரனூடாக, குறுகிய கால அழைப்பாக மற்றைய தமிழ் தலைமைகளுக்கு அழைப்பு விடுத்தது எந்தளவுக்கு முறையானது. இதனையே சி.வி.விக்னேஸ்வரன் தமது கடிதத்தின் வாயிலாக ரணிலிடம் கேட்டிருந்தார். அத்துடன் சுமந்திரன் மீதான நம்பிக்கையீனத்தையும் அப்பட்டமாக தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பிய பதில் விசித்திரமானது. 21ம் திகதி இடம்பெற்ற கூட்டம் உத்தியோகப்பற்றற்றது என்ற மழுப்பலான பதில் மூலம் பிரச்சனையை பூசி மெழுகியது ஜனாதிபதி செயலகம்.

ஏற்கனவே உத்தியோகபூர்வமாக ஆரம்பமான பேச்சுவார்த்தைக்கு நடுவே ஷதிடீர் தோசை| போன்று ஒரு உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது பல சந்தேகங்களை எழுப்புகிறது. நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் – சுமந்திரன் தரப்புடன் கொண்டாடிய தேநிலவு மீண்டும் ஆரம்பமாகிவிட்டதென்று கருத இடமளிக்கிறது.

அரச உயர்மட்டங்களில் ஷகுசினிக் கூட்டம்| என்றொரு வகை சந்திப்பு இடம்பெறுவதுண்டு. முக்கியமான ஒரு சிலர் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துப் பேசி ஒரு முடிவை எடுத்துவிட்டு, பின்னர் அனைவரும் பங்கேற்கும் கூட்டத்தில் பகிரங்கமாக விவாதிப்பதுபோல பாவனை காட்டி, அதனையே முடிவாக அறிவிப்பது உயர்மட்ட நடைமுறைகளில் ஒன்று. உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தை என்று ஜனாதிபதி செயலகம் கூறுவது இதுவாகத்தான் இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனை விளித்து, ‘இவர் எங்கள் சட்டமா அதிபர்” என்று ரணில் கூறியதும், நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டவேளை தாமே அதன் பிதாமகர் என்றவாறு சுமந்திரன் பறைசாற்றி வந்ததும்…. இவைகளை மீள்நினைவுக்கு உட்படுத்தும்போது தற்போதைய பேச்சுவார்த்தையில் சுமந்திரனின் வகிபாகம் என்னவென்பதை ஊகிக்க முடிகிறது.

ஜனவரி ஐந்தாம் திகதி தமிழ் தலைமைகளுடன் அடுத்த கூட்டமென்பதும், பின்னர் பத்தாம் திகதி முதல் பதின்மூன்றாம் திகதிவரையான நான்கு நாட்களுக்கு மரதன் ஓட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுமென்பதும்…. கடந்த 21ம் திகதி இடம்பெற்ற உத்தியோகபற்றற்ற முடிவுகளை பகிரங்கமாக எடுக்கும் முடிவுகளாக மாற்றுவதற்கான ஏற்பாடாக இருக்குமா?

ரணில் விக்கிரமசிங்க இப்போதுள்ள சிங்களத் தலைவர்களில் பழுத்த அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதி. நாற்பத்தைந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஐந்து தடவைகள் பிரதமர் பதவி வகித்தவர். நான்கு தடவை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். ஒன்பது தடவைகள் ஆட்சித்தரப்புக்கு தலைமை தாங்கியவர். முக்கியமான அனைத்து அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர். 1994ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருப்பவர்.

2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தேசியப் பட்டியலால் எம்.பியாகி, மகிந்தவின் பதவி துறப்பையடுத்து கடந்த மே 12ல் பிரதமராகி, கோதபாய நாட்டைவிட்டு ஓடி ஜனாதிபதி பதவியிலிருந்த விலகியதையடுத்து யூலை 13ல் தற்காலிக ஜனாதிபதியாகி, இறுதியில் யூலை 20ல் நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவான ‘ராஜயோக பௌத்த புத்திரன்’.

2002-2004ல் விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், 2015-2020 வரை தமிழ் தேசிய கூட்டமைப்பை முழுமையாக நம்பவைத்து நடித்தும், தமிழருக்கு எந்தத் தீர்வையும் வழங்காது நம்பிக்கைத் துரோகம் இழைத்த சிங்களத் தலைவர் ரணில்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவிருந்த அன்ரன் பாலசிங்கம் 2003 யூன் மாதம் 11ம் திகதி ரணில் பற்றிக் குறிப்பிடும்போது ‘நயவஞ்சக அரசியல் வலைக்குள் தமிழினத்தை வீழ்த்த முனைபவர்” என்று தெரிவித்த கூற்றை இன்று ரணிலுடன் பேச்சை நடத்துபவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

இரண்டு தடவை தமிழருடன் சூதாட்ட கிளிதட்டு நடத்தி வெற்றிகண்ட ரணிலுக்கு இது மூன்றாவது ‘ரவுண்ட்’.

பனங்காட்டான்