உதகையில் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உறைபனிப் பொழிவு தொடங்கி, கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவும். காலநிலை மாறுபாட்டால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின. அந்த வரிசையில், பனிக்காலமும் தாமதமாக தொடங்கியது.
கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீர் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. நவ.22-ம் தேதி உதகையில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அதன் பின்னர் மேன்டூஸ் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்றுவிட்டது.
இந்நிலையில், ஒரு மாதம் கழித்து நேற்று முதல் மீண்டும் உறைபனியின் தாக்கம் தொடங்கி உள்ளது. அதன்படி, உதகை தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டிக் கிடந்தது.
உதகையில் காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. இரவு முதல் அதிகாலை வரை பனி அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடும் குளிரில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். சிலர் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலசுந்தரம் கூறும்போது, ‘‘உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸும், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது. அடுத்த ஒரு சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே நேரம், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 71 சதவீதமாக இருந்தது” என்றார்.