தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 28-ந்தேதி நடக்கிறது

297 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

கடந்த 18-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. அப்போது வரலாறு காணாத வகையில் அமளி ஏற்பட்டது. இதில் தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தாக்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சட்டசபையில் நடந்த நிகழ்வு குறித்து மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் மனு அளித்தார். மேலும் காந்தி சிலை அருகில் அறப்போராட்டத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதியை சந்தித்து, சட்டசபை நிகழ்வு குறித்து மனு அளிக்க மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையில், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை, உள்ளாட்சி தேர்தல், கட்சி பணிகள் குறித்து விவாதிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தி.மு.க. கூட்டியுள்ளது. வரும் 28-ந்தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சொற்பொழிவாளர்கள் (பேச்சாளர்கள்) கூட்டம் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு தியாகராயநகர் அக்கார்டு ஓட்டலில் நடை பெறும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.