வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சமஸ்டியையே கோருகின்றனர் – சீ.தவராசா

423 0

20150111120817_thavarasa_CIவடக்கு கிழக்கு தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தையும், இணைந்த வடக்கு கிழக்கையுமே கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினரும் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவருமான சி.தவராசா இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பை விரும்பவில்லை.
வடக்கின் அரசியல்வாதிகளே அவ்வாறு கோருகின்றார்கள்.
அந்த மக்கள் ஒற்றையாட்சி முறையின் கீழேயே தீர்வை வேண்டி நிற்கின்றார்கள் என்று, அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்தறியும் குழுவின் உறுப்பினர் சி.தவராசா, அது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்தறியும் குழுவின் முன் தமது சமர்ப்பணங்களை மக்கள் முன்வைத்துள்ளனர்.
அதில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தையும், இணைந்த வடக்கு கிழக்கையுமே அவர்கள் கோருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்த குழுவின் சார்பில் வடக்கு கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் கருத்தைப் பெற்ற ஒரேயொரு உறுப்பினர் என்ற வகையில் இதனை தன்னால் உறுதியாக கூற முடியும் எனவும் சீ.தவராசா குறிப்பிட்டுள்ளார்.