ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்

175 0

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அஸிதிஸி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (டிச. 21) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. மிக விரைவில் அதனை மேற்கொள்வோம். அத்துடன் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருந்தோம். என்றாலும் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதனை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அஸிதிஸி ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த புலமைப்பரிசில் வழங்குவதில் சில வேளைகளில் எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தவகையில் இதுவரை 984 ஊடகவியலாளர்கள் இந்த புலமைப்பரிசில் மூலம் நன்மை பெற்றுள்ளனர்.  இம்முறை 49 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அஸிதிஸி புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பித்திருந்த உரிய தகுதிகளைக் கொண்டிருந்த அனைவருமே இம்முறை அதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த தெரிவுகளில் அரசியல் வேறுபாடுகள் இடம்பெறவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். செய்திகளை சேகரித்து வெளியிடும் உரிமை சகலருக்கும் உள்ளது. எனினும் எழுதப்படும் செய்தி சரியான செய்தியாக என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் ஒன்றிற்கு இரண்டு தடவைகள் அதனை உறுதிப்படுத்தி வெளியிடுவது முக்கியமாகும்.

எனவே வாள் எமது கைகளில் இருந்தாலும் பிறர் அதன் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படவேண்டியது ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என்றார்.