மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது.தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது.பொருளாதாரம் சீர்குலைந்து போன பின்புலத்தில் நீதி தொடர்பான பிரச்சினை முன்னரங்கத்துக்கு வந்திருக்கிறது.
பொருளாதார சீர்குலைவு சில பிரிவினரை பெருமளவுக்கு பாதிக்காமல் இருக்கக்கூடும் போதிலும் சனத்தொகையின் மிகப்பெரிய பெரும்பான்மையை பாரதூரமாகப் பாதிக்கின்றது.பொருளாதாரம் மேலும் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அந்த அவலத்துக்கு பெருமளவுக்கு பொறுப்பானவர்கள் இன்னமும் அதிகாரத்தில் இருப்பது மாத்திரமல்ல, தங்களது செயற்பாடுகள் கடந்தகாலத்திலும் சமகாலத்திலும் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை அலட்சியம் செய்து தங்களது ஆட்களை மேலும் அதிகாரப்பதவிகளுக்கு கொண்டுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் பொருளாதாரம் 11.8 சதவீதத்தினால் சுருங்கிவிட்டது என்ற பொருளாதாரத் தகவல் வரவிருக்கும் ஆபத்தின் முன்னறிகுறியாகும்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டின் இடர்மிக்க ஆனால் அதேவேளை புரட்சிகரமான நிகழ்வுகள் அவற்றுக்கு பின்னர் இடம்பெற்ற அரச அடக்குமுறையினால் மறுதலையாக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
போராட்ட இயக்கம் மீதான அரசியல் அடக்குமுறை பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முதலீடுகளை கவரும் வகையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது வெளிப்படையானது.மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடந்தவாரம் நான் பங்கேற்ற மூன்று நிகழ்வுகளில் இது பிரதிபலித்தது.இரு நிகழ்வுகள் உயிர்வாழ்வுக்கான கூட்மைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம் என்று சிவில் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.மூன்றாவது நிகழ்வை அரச நிறுவனமான தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பாக, மூன்றாவது நிகழ்வு இலங்கைச் சமூகத்தின் பல்வகைமையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடிய முறையில் அமைந்த காரணத்தினால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெச்சக்கூடியதாகவும் அமைந்தது.இவ்வாறு அமைவது மிக அரிதாகும்.மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறு காரணங்களுக்காக அண்மைக்கால நிகழ்வுப்போக்குகளில் கணிசமானளவுக்கு கவனத்தைச் செலுத்தியது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் ( பதவியில் இருக்கும் ஜனாதிபதி தான் விரும்பிய எவரையும் நியமிப்பதற்கான தற்துணிபு அதிகாரத்தை அவருக்கு வழங்குகின்ற ) அரசியலமைப்புக்கான 20 திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.அந்த திருத்தம் ஜனாதிபதியின் கைகளில் மட்டுமீறிய அதிகாரங்களைக் குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆரம்ப காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டது.
ஆணைக்குழு தரங்குறைப்பு
20 அரசியலமைப்பு திருத்தமும் சுயாதீனமான நிறுவனங்களை பலவீனப்படுத்தபடுத்திய செயல்களும் மனித உரிமைகள் விவகாரங்கள் மீது கவனத்தைச் செலுத்துகின்ற சிவில் சமூக அமைப்புகளினதும் சர்வதேச சமூகத்தினதும் கடுமையான கண்டனத்துக்குள்ளாகின. இதன் துரதிர்ஷ்டவசமான விளைவாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ அந்தஸ்தில் இருந்து ‘பி ‘ அந்தஸ்துக்கு தரமிறக்கப்பட்டது.
இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானிப்புகளும் அபிப்பிராயங்களும் கூடுதலான அளவுக்கு எச்சரிக்கையுடன் நோக்கப்பட்டதுடன் கனதி குறைந்தவையாகவும் கருதப்பட்டன.இது உலகில் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான ஆணையைக்கொண்ட சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான ஆதரவின் மட்டத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு தரங்குறைப்பு சர்வதேச கூட்டுப்பங்காண்மையின் ஊடாக பெறப்பட்டிருக்கக்கூடிய டொலர்கள் வருகையை குறைத்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்தை மறைமுகமாக பாதித்திருக்கிறது.அது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேசத்தின் மத்தியில் தாழ்ந்த எண்ணம் உருவாகுவதற்கும் வழிவகுத்தது.
இதன் விளைவுகளில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது உட்பட பெருமளவு மனித உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வாபஸ் பெறக்கூடிய சாத்தியம் குறித்து இலங்கையை எச்சரிக்கை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளக்கூடிய தீர்மானமாகும்.20வது திருத்தத்தின் விளைவாக இலங்கையின் நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மை பலவீனப்படுத்தப்பட்டமை கடந்த அக்டோபரில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் நாட்டுக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் பங்களிப்புச் செய்தது.
அரசாங்கம் கொண்டுவந்த 21 வது அரசிலமைப்பு திருத்தம் பொதுவில் வரவேற்கப்பட்டது என்றாலும் அதன் மூலமாக 20 வது திருத்தத்தை ரத்துச் செய்யும் பணி முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை.உதாரணமாக, பாராளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தனது தற்துணிபின் அடிப்படையில் அதை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி இன்னமும் கொண்டிருக்கும் அதேவேளை தனது கட்டுப்பாட்டில் பல அமைச்சுக்களை அவரால் வைத்திருக்கவும் முடியும்.
தான் விரும்புகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் அமைச்சராக நியமிக்க்கக்கூடிய தற்துணிபு அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டிருக்கிறார். ஆனால், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை, தன்னெண்ணப்படி செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு 20 வது திருத்தத்தின் கீழ் இருந்த அதிகாரம் புதிய திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட்டிருக்கிறது.இதனால் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்க நபர்கள் நியமிக்கப்படக்கூடிய பெருமளவு சாத்தியத்துக்கு வழிபிறக்கும்.
ஆணைக்குழுக்களை மீள அமைத்தல்
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை மீள நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் 21வது திருத்தம் கொண்டிருக்கிறது.தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்கிப்போகாத சுயாதீனமான நிலைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் எடுத்திருப்பதால் அவற்றுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் தெரிவித்திருக்கிறார்.சர்ச்சைக்குரிய பல விவகாரங்களில் இவ்விரு ஆணைக்குழுக்களும் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டியிருக்கும் நிலையில் அதன் உறுப்பினர்களை அரசாங்கம் மாற்றினால் அது துரதிர்ஷ்டவசமானது.
அரசாங்கத்தின் அதிருப்தியை சம்பாதிக்கவேண்டிய ஆபத்து இருக்கின்ற போதிலும் கூட, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் இலட்சியங்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு அரச நிறுவனத்துக்கு ஒருமைப்பாட்டை காண்பிக்கவேண்டும் என்ற எனது விருப்பமே மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்று என்னை தூண்டியது.அந்த நிகழ்வு நாட்டைப் பாதிக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமானதும் அழுத்தமானதுமான அணுகுமுறையொன்றை கடைப்பிடித்ததால் எடுத்துக்காட்டாக அமைந்தது. அடிப்படை மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் உள்ளடங்கியிருக்கும்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமைகள் மீதே தற்போது கவனம் குவிந்திருக்கிறது.
ஒன்றுகூடுவதற்கான உரிமையும் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் இயங்குநிலை ஜனநாயகம் ஒன்றுக்கு அடிப்படையாகும்.போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்டிருப்பதன் விளைவாக இந்த உரிமைகள் அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டும் குறுக்கப்பட்டும் இருக்கும் சூழ்நிலையை காணக்கூடியதாக இருக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழிசெய்யக்கூடிய அரசியல் உறுதிப்பாடே தற்போதைய தருணத்தின் தேவை என்பது அரசாங்கமும் வர்த்தக சம்மேளனங்களும் கற்பிக்கின்ற நியாயமாக இருக்கிறது.இந்த வாதம் சகல தரப்பினரையும் அரவணைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்கிறது.அவ்வாறு செய்ததனாலேயே இன்றைய கவலைக்குரிய நிலை நாட்டுக்கு ஏற்பட்டது.கடந்த காலாண்டில் மட்டமான பொருளாதார செயற்பாடுகள் சகல தரப்பினரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய அணுகுமுறையை அரசாங்கத்தின் கொள்கைக்குள் உள்ளடக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக அரசாஙகமும் வர்த்தக சமூகமும் அடைய நினைக்கின்ற போலி உறுதிப்பாடு நாட்டுக்கு எந்தவிதமான அனுகூலத்தையும் கொண்டுவராது.
அகல் விரிவான நல்லிணக்கம்
தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதிபூண்டிருக்கிறார்.நாட்டின் இன,மத சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கத் தவறியமையே பல தசாப்தகால பாரபட்சத்துக்கும் அன்னியப்படுத்தலுக்கும் இறுதியில் பயங்கரவாதம் மற்றும் போருக்கும் வழிவகுத்தது.ஆனால் சகல தரப்பினரையும் உள்வாங்கி அரவணைக்கும் உண்மையான செயற்பாடுகள் இன,மத பல்வகைமை எல்லைகளுக்கு அப்பால் செல்லவேண்டியதாக இருக்கும்.
அது இன,மத பிளவுகளுக்கு அப்பால் விரிந்திருக்கும் இலங்கைச் சமூகத்தின் பல்வகைமை மற்றும் பன்முகத்தன்மையின் ஏனைய அம்சங்களையும் கருத்தில் எடுத்ததாக இருக்கவேண்டும்.சனத்தொகையின் பெருமளவு பிரிவினரை தங்களது மனித உரிமைகளை அனுபவிப்பதில் இருந்தும் சமூக மற்றும் பொருளாதாரவாழ்வுப் பொது நீரோட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும் விலக்கிவைக்கும் சாதி, மதம், பிரதேசம், பால்வேறுபாடு , உடல் ஊனம் மற்றும் தொழில்கள் தொடர்பிலான பிரச்சினைகளும் இருக்கின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்வு தேசிய சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளுக்கு அதன் பரந்தளவிலான சேவைகளின் அவசியத்தை உணர்த்தும் ஒன்றாக அமைந்தது.அந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.பாலியல் தொழிலாளர்கள்,பால் சிறுபான்மையினர், சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியலில் உள்ள பெண்கள், எயிட்ஸ் நோயாளிகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட குறைந்தது இருபது பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் சார்பில் பிரச்சினைகள் எடுத்துக்கூறப்பட்டன.குள்ளமான கொண்ட தாயொருவர் தன்னைப் போன்றே உருவம் கொண்ட மகன் சமுதாயத்தினால் இரக்கமோ கண்ணியமோ இன்றி நடத்தப்படுவதைப் பற்றி கூறியதை கேட்டபோது மனம் நெகிழ்ந்தது.வங்கிக்கு அந்த மகன் சென்றால் அங்கு அவனை விடவும் உயரம் கூடிய கருமபீடத்தில் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ளமுடியாமல் இருப்பதாகவும் தாய்்கூறிக் கவலைப்பட்டார்.
தங்களால் குரலெழுப்பவும் போராடவும் முடியும்,ஆனால் தங்களது கோரிக்கைகள் செவிமடுக்கப்படமாட்டாது என்பதே அங்கு பேசிய பலர் வெளிப்படுத்திய மனக்குறையாக இருந்தது.உறுதிமொழிகள் தரப்படுகி்ன்றன,ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் முறையிட்டார்கள்.
சமுதாயத்தில் அவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள், எத்தகைய அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சகலரினதும் குரல்களை செவிமடுப்பதே பன்முகத்தன்மைக்கான ஒரு மதிப்பாகும்.அடுத்த சுதந்திர தினம் அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதியளிக்கும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரையே அவர் மனதில் கொண்டிருக்கிறார். கண்ணுக்கு புலப்படாத அங்கீகரிக்கப்படாத சிறுபான்மையினரையும் பாதுகாத்து பராமரிக்கும் போதுதான் இலங்கை அரசு மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்.
கலாநிதி ஜெகான் பெரேரா