மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை அகற்றிய வன ஜீவராசிகள்: ரவிகரன்

130 0

மக்களின் முழு ஆதரவுடன் இடம்பெற்ற எதிர்ப்பினை அடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியதனால் மக்கள் மனமகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு மக்களின் காணிகளுக்கு நில அளவை திணைக்களத்தினர் புதிதாக எல்லை கற்களை நாட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்திற்கு நேற்று முன்தினம் களவிஜயம் மேற்கொண்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில்,“கொக்கு தொடுவாய் மத்தி எனப்படுகின்ற குறிப்பிட்ட இடத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு அவர்களுடைய வேண்டுகோளுக்கமைய வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவை திணைக்களத்தினர் நேரடியாக இப்பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்களுக்கு மேற்பட்ட இடங்களுக்கு எல்லை கற்களை நாட்டி இருந்தார்கள்.

குறிப்பாக கோட்டக்காணி பிள்ளையார் கோயில் அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுகால்வெளி, சிவந்தா முறிப்பு போன்ற வரிசையில் உள்ள இடங்களுக்கு கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது கல் அளவில் எல்லைக் கல்லை நாட்டிவிட்டார்கள்.

இது சம்பந்தமாக நேற்றையதினம் என்னுடன் தொடர்பு கொண்டு கூறியதற்கு அமையவும். இங்கு வந்த மக்கள்  அமைப்புக்கள், பிரதேச செயலகங்களோடு தொடர்பு கொண்டு தெரிவித்திருந்ததோடு, நான் மேலதிக அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டும் இருந்ததால் குறிப்பிட்ட இடத்துக்கு நாங்கள் இன்று வருகை தந்திருந்தோம்.

ஆனால் நில அளவை திணைக்களத்தினர் அங்கு வரவில்லை. உடனடியாக அவர்களை அழைத்து பிரதேச செயலக ஊழியர்களும், காணிக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட ஊழியர்களும்  கிராம சேவையாளரும் வருகை தந்து அவர்களும் மக்களுக்காக வாதாடி  கொண்டிருந்தார்கள்.இறுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகைதந்ததுடன் நில அளவை திணைக்களத்தினரிடம் இருந்து இந்த இடம் மக்களுடைய சொந்த உறுதிக்காணி என்பதை அந்த மக்களினுடைய அமைப்புக்கள் தெளிவுபடுத்தி உடனடியாக அவர்களை பின்வாங்க செய்துவிட்டோம்.

அந்த இடத்திலிருந்து தாங்கள் போட்ட கற்களை எடுப்பதாக கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் மக்களோடு சேர்ந்து விடாப்பிடியாக நின்றோம்.

இந்த கற்கள் அவ்வளவும் இன்றைக்கே அகற்ற வேண்டும், கற்கள் முழுவதும் எடுக்கப்பட்டன முன்பு போடப்பட்ட பழைய கற்களின் அடிப்படையிலே இந்த காணிகள் அளக்கப்பட வேண்டுமே தவிர புதிதாக எங்களுடைய மக்களின் காணிகளுக்குள் இவர்கள் வர முடியாது என்ற நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு இந்த கற்கள் முழுவதும் அகற்றப்படுகின்றன.

இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்ததை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களமும் நில அளவை திணைக்களமும் வெலிஓயா பகுதியில் இருந்து வந்த நில அளவை திணைக்களமும் மாவட்ட செயலாளரோடும் பிரதேச செயலாளரோடும் கூடி கலந்துரையாடுவதோடு அந்த கூட்டத்துக்கு எங்களையும் இந்தப் பகுதி அமைப்புகளையும் அழைப்பார்கள் என எண்ணுகின்றேன்.

இது சம்பந்தமான கலந்துரையாடல் எதுவும் செய்யாமல் தங்களுடைய எண்ணத்துக்கு ஏற்ப நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டினோம். அதற்கமையத்தான் இந்த விடயங்கள் சீராக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துகொள்வதோடு உரம்பாய்ந்த கொக்குத்தொடுவாய் மக்கள் மன மகிழ்ச்சியூடன் வீடு சென்றார்கள்.” என தெரிவித்திருந்தார்.