எழிலன் எங்கே? – இராணுவம் பதில் கூற வேண்டும்! -இரா.சம்பந்தன்

129 0

இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று இராணுவத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் கருத்துரைக்கும் போதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அல்லது சரணடைந்திருந்த பின்னர் அல்லது கைது செய்யப்பட்ட பின்னர் எழிலன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டியதும் இராணுவத்தினரின் கடமைப்பாடு.

அது தொடர்பில் போதிய விளக்கத்தை இராணுவத்தினர் நீதிமன்றத்திடம் முன்வைக்க வேண்டும். அந்தக் கடமையிலிருந்து இராணுவத்தினர் ஒருபோதும் விலக முடியாது” – என்றார்.