பாதிப்புகளுக்கு உள்ளாகிவரும் மக்களுக்கு காலத்துக்கு எற்றவாறு அத்தியாவசிய சேவைகளை மேற்கொண்டுவரும் மன்னார் மெசிடோ நிறுவனம் ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த நிலையில் கடற் படையினரால் மீட்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் 105 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) நேற்று செவ்வாய்க்கிழமை (டிச20) மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று வழங்கி வைத்தது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று சுமார் 19 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆண்கள், பெண்கள் சிறுவர்களுக்கான ஆடைகள், சுகாதார பொருட்கள், உணவுகள் உள்ளடங்களான பொருட்களை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையில் வழங்கி வைத்தனர்.
யாழ் சிறைச்சாலையில் இருந்து மிரிஹானவில் உள்ள குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இவ்வாறு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்டவிரோதமாக பயணித்தபோது நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் படகில் பயணித்த 104 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அதேநேரம் படகு உரிமையாளர் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.