திருடியவர்கள் பொலிஸ் அதிகாரியின் மீது தலைகவசத்தினால் தாக்குதல்

82 0

கம்பளையில் ஆசிரியை ஒருவரின் தங்கச் சங்கிலியினை பறித்துக்கொண்டோடிய திருடர்களை பிடிக்கச் சென்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவர் திருடர்களின்  தலைகவசத்தினால்   (ஹெல்மெட்)  தாக்கப்பட்ட படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை  (20 )  மாலை இடம் பெற்ற மேற்படி சம்பவத்தின் போது கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியான எம் ரிஸ்வியே  திருடர்களின் தாக்குதலுக்கு இலக்கான  நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த திருடர்கள் கம்பளை மறியாவத்தை பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவரின் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவம் குறித்து கம்பளை கண்டி வீதியில் ஹெரோயின் போதைப்பொருள்  சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரிக்கு தெரியவந்ததையடுத்து குறித்த திருடர்களை முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்று கம்பளை போத்தலா பிட்டிய பிரதேசத்தில் வைத்து இடை மறித்து கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த இரு திருடர்களும் தாங்கள் அணிந்திருந்த தலைகவசத்தால் சரமாரியாக பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் இடம் பெற்று சிறிது நேரத்தின் பின்னர் புகையிரத பாதையில் ஒழிந்திருந்த கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கில் களனி விகாரைக்கு சுற்றுலா வந்திருந்த நபர் ஒருவரிடமிருந்து திருடியது என்பது தெரிய வந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.