முன்னாள் எம்பி மைத்ரேயனை அதிமுக அமைப்புச் செயலாளராக நியமித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரது ஆசி பெற்று கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்து வந்தார். கட்சி தொடர்பான பொதுக்கூட்டங்களில் முதல் ஆளாக சென்று கூட்டத்தை வழி நடத்துவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் பழனிசாமி அணிக்கு தாவினர். அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தபோது, ஓபிஎஸ் நலம் விசாரித்துள்ளார். எதிர் அணியில் இருக்கிறேன் என்று தெரிந்தும் என்னிடம் நலம் விசாரித்ததை நினைத்து நெகிழ்கிறேன் எனக்கூறி, மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, மைத்ரேயனை கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளராக மைத்ரேயனை, பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நியமித்துள்ளார்.