கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி

178 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 8 பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சந்திம எதிரிமான்ன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு ஒரு தற்துணிவு வேண்டும். நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமைத்துவத்திலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.

வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சி தலைவர்,நெருக்கடிகளுக்கு தீர்வை முன்வைக்கவில்லை.

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை தற்போது முன்வைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட தரப்பினர் நெருக்கடியான சூழ்நிலையில் நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு எதிர்தரப்பினர் தற்போது வலியுறுத்துகிறார்கள். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கடந்த மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போட்ட போது எவரும் அதற்கு எதிராக கருத்துரைக்கவில்லை.

நாடு மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் தேர்தலை நடத்துவது எந்த பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்காது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தியவுடன் டொலர் நெருக்கடிக்கு தீர்வு பெற முடியாது. தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது எந்த பிரச்சினைக்கும் சாதகமாக அமையாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 8 பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். கொள்கை அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகவுள்ளோம்.

ஜனநாயக கொள்கைக்கு அமைய தேர்தலை பிற்போட வேண்டிய நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது,இருப்பினும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.தேர்தல் இடம்பெற்றால் போட்டியிட தயாராகவுள்ளோம் என்றார்.