பல்கலைக்கழகங்களுக்குள் பாதாளக்குழு கும்பல் செயல்படுவதாக பரப்பப்படும் பிரச்சாரங்களை நிறுத்தாவிட்டால் 95 வீதமான அப்பாவி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஒழுக்கமாகவும் நாகரீகமாகவும் செயல்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றை சனிக்கிழமை (டிச.18) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
95 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தவறான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதில்லை. இருப்பினும் சில மாணவர்களின் நடவடிக்கைகள் காரணமாக பல்கலைங்களுக்குள் குண்டர் குழுக்கள் செயல்படுவதாக பிரச்சாரங்கள் பரவி வருகின்றன.
இது எமக்கு பாரியதொரு சவாலாகும். இதனை இல்லாதொழிக்க வேண்டும். நாளை பட்டம் பெற்று வெளியில் செல்லும் மாணவர்கள் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படலாம்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு மிகவும் வருந்த தக்கது. நானும் பல்கலை உபவேந்தராக செயற்பட்டுள்ளேன்.
பொறுப்பிலிருந்த காலங்களில் மாணவர்கள் எங்களை தாக்குவதற்கு வரவில்லை. நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என்று புறக்கணிக்கவில்லை. அவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகியிருந்தால் பொறுப்புக்களில் இருந்து அன்றே விலகியிருப்போம்.
1988 – 89 காலக்கட்டங்களில் மக்களைக் கொன்றார்கள். தலையை துண்டித்தார் கள். இருப்பினும் ஒரு மதம் சார்ந்து ஒற்றுமையாக முன் சென்றோம்.
இது இன்றைய சமூகத்தினருக்கு நல்ல உதாரணமாகும்.மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்தால் கல்வி கற்று வெளியேறும் வரையில் ஒழுக்கமாகும், நாகரீகமாகவும் நடந்து கொண்டு சமூகத்திற்கு முன்மாதிரியாக மாணவர்களாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.