மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் இரவு பகலாகத் தொடரும் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் தொடர்கிறது

273 0

மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

தமது போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மட்டக்களப்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் தொடர்ந்து வரும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரகப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள், பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப் பரிட்சையின் மூலம் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால், போட்டிப் பரீட்சையின்றி, நேர்முகப் பரீட்சையின் மூலம்  பயிற்சி அடிப்படையில் நியமனங்களை பட்டதாரிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டதாரிகளுக்கான நியமனங்கள், அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க வேண்டும்.பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரப்படும்போது, ஏற்கெனவே அரசாங்க சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்காத வகையில் சுற்றுநிருபம் அமைய வேண்டும்.

கோட்டா முறையில் நியமனங்களை வழங்கும் செயற்பாட்டை தடை செய்ய வேண்டும். விண்ணப்பம் கோரப்படும்போது, மாற்றுத்திறனாளிகள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடத்தை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 2012 மார்ச் மாதம் 31 திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற 4500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ள போதும் இவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் மத்திய மற்றும் மாகாண அரசுகள் பெற்றுத்தராத நிலையில் இந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் மேற்கொண்டுள்ள குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தினை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வருகின்ற நிலையில் இதுவரையில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு எந்த அரசியல் வாதிகளோ, அரச அதிகாரிகளோ வந்து தங்களுடைய பிரச்சினை தொடர்பில் கேட்டறியவில்லை என்றும் கவலை தெரிவித்தனர்.