தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப்பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்துவிட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தம்பதெனிய தேர்தல் தொகுதியில் திங்கட்கிழமை (டிச.19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு சுதந்திர கட்சியும் பொறுப்பு கூற வேண்டும். சுதந்திர கட்சியின் தலைவர்கள் இழைத்த தவறுகளை எவ்வாறு திருத்திக் கொள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். 2015 இல் ஐ.தே.க. , சு.க. இணைந்து நல்லாட்சியமைத்தன் விளைவாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.
எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவது பொறுத்தமற்றது எனக் கூறி , பொதுஜன பெரமுன , சு.க. இணைந்து ஆட்சியமைக்கப்பட்டது. இன்று அந்த நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது. தற்போது பொதுஜன பெரமுனவும் , ஐ.தே.க.வும் இணைந்துள்ளது.
சு.க. , ஐ.தே.க.வுடன் இணைந்து ஆட்சியமைத்த போது ஜனாதிபதி பதவி எம்வசமே காணப்பட்டது. ஆனால் இன்று பொதுஜன பெரமுனவிற்கு என்ன ஆகியுள்ளது? பொதுஜன பெரமுன தன்வசமிருந்து ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து நிற்கிறது. பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டமைக்கான இலக்கு முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொள்ளைக்காரர் என விமர்சித்தவர்கள் இன்று , அமைச்சுப்பதவிக்காக அவரின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றார். பொதுஜன பெரமுனவின் ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டது. எனவே மீண்டும் சுதந்திர கட்சியை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.