வல்லரசுகளின் அதிகார போட்டிகளால் இலங்கையால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை

159 0

வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகார போட்டி , இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியில் எம்மால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பினைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ஷ குடும்பம் இன்று அதனை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிச. 19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட நிலைமையையும் தற்போதுள்ள நிலைமையை ஒப்பிட்டு பார்த்து , எதிர்வரும் காலங்களில் மக்கள் சிந்தித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு , தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய பிரசாரங்களின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

ஆனால் இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? ஆர்ப்பாட்டங்களின் ஊடாக ராஜபக்ஷ குடும்பம் துறத்தியடிக்கப்பட்டுள்ள போதிலும் , மீண்டும் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் ஒருவரே பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் இவை தொடர்பில் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

உலக வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகார போராட்டம் , இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியில் எம்மால் சுயாதீனமாக செயற்பட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிட்டு , ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ஷ குடும்பம் இன்று அதனை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் பார்க்கும் போது , இன்று எமது நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பிரபல வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு மணித்தியாலயத்திற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுமளவிற்கு இன்று தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு, கொலைகள் இடம்பெறுகின்றன.

போதைப்பொருள் தொடர்பில் பாடசாலை மாணவர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்தும் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தவிர்த்து மாணவர்களை சோதனைக்குட்படுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. பாடசாலை அதிபர்களே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான கடத்தல்காரர்கள் , அவர்களுக்கு துணைபோகும் அரசியல்வாதிகளே சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களை சோதனைக்கு உட்படுத்தி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.