மக்கள் நலன் கருதி எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். அதற்கமைய நிதி தொடர்பான கட்டுப்பாடுகளில் ஜனவரி முதல் தளர்வுகள் ஏற்படும் என நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்புடன் தொடர்புடைய வசதிகளை குறைக்காமல் பராமரிப்பதற்கு வரவு – செலவு திட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பொதுவான அம்சமாகக் காணப்பட்டது வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறைவடைந்தமையாகும்.
தொழில்கள் இழக்கப்பட்டமை, முதலீட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தவற்றை செயற்படுத்த இயலாமை , அதில் ஆர்வமின்மை , கட்டுமானத்துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன இதில் தாக்கம் செலுத்தின.
கடந்த சில மாதங்களில் நாம் எதிர்கொண்ட நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக , உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமின்றி , முழு நாட்டையும் பொதுவான முடிவிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.
அதற்கமை நிதி முதலீடுகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் நிறுவனங்கள் வருமானம் பெறும் வழிகள் வீழ்ச்சியடைந்தன. இவை அரசாங்கத்திற்கு உரித்தான திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தின.
ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலைமையை ஓரளவுக்கு தளர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. உள்ளுராட்சி நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ள தடைகளை நீக்க முடியும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.