கொழும்பில் பரீட்சை எழுதிய கொட்டகலை மாணவன்

129 0

கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொழும்பு இசிபத்தன கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தோற்ற இருந்த மாணவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக சனிக்கிழமை கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்தமையால் அவரை, நேற்று மாத்திரம் வைத்தியசாலையிலிருந்து விடுவித்து, பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் அடுத்த தினம் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்திருந்தது.

எனினும், அந்த மாணவனுக்கு  கொழும்பிலிருந்து மீண்டும் கொட்டகலைக்கு பயணம் செய்து  பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. இதனையடுத்து வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் பெற்றோர், நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளரான எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நான், தேவையான சகல ஆவணங்களையும் மின்னஞ்சல் ஊடாக அவருக்கு அனுப்பி வைத்தேன்.

அதற்கு அமைய பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா, குறித்த மாணவன் தற்காலிகமாக வசிக்கும் தமது உறவினர் வீட்டுக்கு அருகாமையிலுள்ள கொழும்பு இசிப்பத்தன கல்லூரியில் பரீட்சை எழுதுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்” என்றார்.