தெரிவு செய்வது நாட்டு மக்களின் பொறுப்பு

105 0

எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான முகாம்களே போட்டியிடுகின்றன எனவும், ஒரு முகாம் என்பது மத்திய வங்கியைக் கொள்ளையடித்து நாட்டையே வக்குரோத்தாக்கிய குழுக்களால் உருவாக்கப்பட்ட புனிதமற்ற கூட்டணி எனவும், நாட்டிற்கு ஆபத்து வரும்போது அது குறித்து ஏலவே தெரியப்படுத்தி, SriLankaFirst என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பும் தூய்மையான வேலைத்திட்டத்துடன் உள்ள குழுவே மற்றைய முகாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கையை தோல்வியடையச் செய்யும் அணியா அல்லது இலங்கையை முதலிடமாக்கும் அணியா என்பதை தெரிவு செய்வது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை கட்டியெழுப்ப ஒரே வழி ஐக்கிய மக்கள் சக்தியே எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி எப்பொழுதும் ஒரே மந்திரத்தையே உச்சரிக்கிறார். நாளை கஷ்டம், எதிர்காலம் கஷ்டம், விற்காமல் கஷ்டம், மீள்வது கடினம். நாடாளுமன்றத்திற்கு வந்தாலும் அந்த மந்திரத்தையே சொல்கிறார். நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதும் அதையே சொல்கிறார். ஊடகவியலாளர் மாநாடு நடத்தினாலும் கூட அதைத்தான் சொல்கிறார். இந்நாட்டில் சகல பாகங்களில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டின் தற்போதைய பிரச்சினை தெரியும்.நாடு இக்கட்டான நிலையில் உள்ளது. ஆனால் அதற்கு பதில் சொல்லவே அரசாங்கமென்ற ஒன்றுள்ளது.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது அவ்விரு தரப்பினரும் என்ன செய்கின்றார்கள்? நாம் ஐ.தே.க யுடன் இணைவோம் என மொட்டுத் தரப்பினர் கூறுகின்றனர். நாம் மொட்டுவுடன் இணைவோம் என ஐ.தே.க தரப்பினர் கூறுகின்றனர். ஆனால்,அந்த இரு தரப்பினரும் முன்பே இணைந்தது முழு நாட்டிற்குமே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரச சேவை ஓய்வுபெற்றோர் சக்தியின் குருநாகல் மாவட்ட மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று (17) இடம் பெற்றது. இப்பிரிவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.