இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் சாயமின்றி மேற்கொள்ளப்படும், போராட்டங்களுக்கு, தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டமே உந்துசக்தியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் நில மீட்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அண்மைக் காலங்களாக பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதுஎவ்வாறு இருப்பினும், இவற்றில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் பெறவில்லை என்பது விஷேட அம்சமாகும்.
இந்தநிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதியான கிளர்ச்சியையும், அதன் மூலம் கிடைத்த வெற்றியையும் மக்கள் தொலைக்காட்சிகளூடாக பார்த்து அதை ஒத்த ஆர்ப்பாட்டங்களை இலங்கையிலும் மேற்கொண்டு வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இன்றி பெறப்பட்ட இந்த மாபெரும் வெற்றி இலங்கையிலும் வெற்றியளிக்கும் என மக்கள் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போது மக்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அரசியல் கட்சிகள் வௌிப்படையாகவே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனாலேயே ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டங்களை மாதிரியாகக் கொண்ட போராட்டங்களை இலங்கையில் உள்ளவர்களும் மேற்கொண்டு வருவதாகவும், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சிகளுக்கு வேறு தெரிவுகள் இல்லை எனவும், இந்த கிளர்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், நாம் அதனை ஊக்கப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.