“பின்லேடன் உயிருடன் இல்லை. ஆனால்…”

114 0

 “ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்துப் பதிவு செய்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கிய இந்தியா 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதில் ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களுக்காக பாகிஸ்தானை கடுமை விமர்சித்தார். மேலும், “இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது. மேலும், தீவிரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது” என்ற கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தானை நோக்கி வைத்தார்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்ச்சையான விதத்தில் பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பிலாவல் பூட்டோ கூறும்போதுபோது, “நான் இந்தியாவுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் இருக்கிறார்… அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) பிரதமராகும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இவர்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமரும். ஆர்எஸ்எஸ் என்றால் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டவர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை முன்வைத்திருப்பது சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.