2 லட்சம் பேரை களமிறக்கி கீவ் நகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

74 0

 “மீண்டும் கீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்காக படைகளை ஒருங்கிணைத்து வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று உக்ரைன் படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் தற்போது ஓராண்டை நெருங்கவுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலுக்கு ஆயத்தமாவவதாகவும், அதற்காக புதிதாக 2 லட்சம் பேரை களத்தில் இறக்கவுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் படைத் தளபதி ஜெனரல் வேலரி ஜலூஜ்னி அளித்தப் பேட்டியில், “மீண்டும் கீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்காக படைகளை ஒருங்கிணைத்து வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த அக்டோபர் மாதம் முதல் ரஷ்யப் படைகள் எங்களுக்கான மின் சக்திகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் எங்களின் எரிசக்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் எதிரியை வீழ்த்த முடியும். ஆனால் எங்களுக்கு 300 டாங்கர்கள், 600 முதல் 700 இன்ஃப்ன்ட்ரி ஃபைட்டிங் வெஹிக்கிள்ஸ், 500 ஹவிட்சர்ஸ் தேவைப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கீவ் நகரில் தாக்குதல்: கீவ் நகரில் இன்று காலை தொடங்கி ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கீவ் மேயர் விடாலி கிட்ஸ்ச்கோ கூறுகையில், “கீவ் மாகாணத்தின் டேஷ்னியான் மாவட்டத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தியுள்ளோம். கிழக்கு கார்கிவ் பிராந்தியம் முழுவதும் மின்சாரம் இன்றி மூழ்கியுள்ளது. இது கடும் குளிர் காலம் என்பதால் மின்சாரமின்றி மக்கள் கடுமையான பாதுகாப்புகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்” என்றார்.