காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர் வேகமாக வெளியேற தரைப்பாலங்கள் உடைக்கப்பட்டன. இதனால் கரையோர குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து அப்பகுதி மக்கள் செல்கின்றனர். மேலும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாக்கம் அருகே தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கனமழையால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்று வெள்ளம் வேகமாக வடிவதற்காக முக்கிய தரைப்பாலங்கள் உடைக்கப்பட்டன. இதனால் காஞ்சிபுரம் அடுத்த முருகன் குடியிருப்பு, பல்லவர் குடியிருப்பு உட்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்த வழியாகச் செல்ல முடியாமல் 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆபத்தை உணராமல் சிலர் ஆற்றிலேயே இறங்கி கடந்து செல்கின்றனர். இதனிடையே பாலாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. தற்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் செல்வதால் பெரும்பாக்கம் அருகே தரைப்பாலம் சேதமடைந்தது.
இதனால் பெரும்பாக்கத்தில் இருந்து வடஇலுப்பை, பிரம்மதேசம், நாட்டேரி, சீவரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லக் கூடிய போக்குவரத்து துண்டிக்கப்பட்டள்ளது.