நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை சர்வதேசத்தையும், தமிழ் சமூகத்தையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.
இவரது ஏமாற்று செயற்பாட்டில் பங்காளிகளாக கூடாது என்பதற்காகவே கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தோம்.
அனைத்து பிரஜைகளும் சமமாக மதிக்கப்படும் சூழல் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்த வேண்டும். அதுவே உண்மையான இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (13ஆம் திகதி) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான சந்திப்பை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புறக்கணித்தமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய செயற்படவில்லை.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற உண்மை நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு காணப்படுமாயின் அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் அதனை செய்திருப்பார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல,அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி.
அவர்களின் நோக்கத்திற்கு அமையவே அவர் செயல்படுவார். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தர்ம சங்கடத்திற்கு உள்ளான நிலையில் சபையில் வைத்து இணக்கம் தெரிவித்தாரே தவிர அவர் ஒருபோதும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டார். தனது தரப்பினர் ஊடாக அதிகார பகிர்வு விடயத்தை அவர் தடையாக இருப்பார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் அதிகார பகிர்வுக்கு தான் தயார் என ஜனாதிபதி சர்வதேசத்தையும்,தமிழ் சமூகத்தையும் ஏமாற்றும் வகையில் செயற்படுகிறார்.
இவரது ஏமாற்று செயற்பாடுகளுக்கு பங்குதாரராக நாங்கள் தயார் இல்லை. தீர்வு வழங்குவது சாத்தியமற்றதாயின் அது இன நல்லிணக்கத்திற்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அனைத்து பிரஜைகளும் சமமாக மதிக்கப்படும் சூழல் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்த வேண்டும். அதுவே உண்மையான இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்.
நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் சமூகம் என அடையாளப்படுத்துவதை அரசியலமைப்பினால் தவிர்க்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள், இன அடிப்படையில் எவருக்கும் விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்பட கூடாது.ஒரு இனத்திற்கு மாத்திரம் அரசியலமைப்பினால் விசேட சலுகை வழங்கப்படும் போது எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார்.