வீச்சுவலைகள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கந்தளாயில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு முஸ்லிம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து கந்தளாயிலிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.
வீச்சுவலைகளைப் பாவிப்பதை தடை செய்திருப்பதனால் 100க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. மேற்படி தடையை இரத்துச்செய்யக்கோரி முஸ்லிம் மீனவர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தை குழப்பும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆட்டோவில் வந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பல மீனவர்கள் காயமடைந்தனர்.
நிஷார் மற்றும் பாகீர் என்ற மீனவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கந்தளாய்க் கிராமத்தில் வாழும் முஸ்லிம் மீனவர்கள் கந்தளாய் குளத்தில் 100 வருடங்களுக்கு மேலாக வீச்சு வலையையும் தூண்டிலையும் பாவித்து மீன்பிடித்து வருவதாகவும் அண்மையில் மீன்பிடி அதிகாரியொருவரினால் மேற்படி இருவகை முறைகளும் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் மேற்படி தடையினால் கந்தளாயில் வாழும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் தடையை நீக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தும் நோக்கில் போட்டங்காடு எனும் இடத்திலிருந்து மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இவ்வேளையில்தான் இரு ஆட்டோக்களில் வந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சூத்திரதாரி பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த மீன்பிடித்திணைக்கள அதிகாரியென தாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.