ரத்தன தேரர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்தேயாகவேண்டும்

260 0

அத்துரலியே ரத்தன தேரர் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் தெரிவித்துக்கொண்டு தனது தீர்மானத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்த போதிலும் அவர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்தேயாகவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி விடாப்பிடியாக இருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தங்களது கட்சி செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியலில் ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.

அவர் சுயாதீனமாகச் செயற்பட்டாலும் கூட கட்சியின் உறுப்புரிமை அவருக்கு உள்ளது. எனவே, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பூரண அதிகாரம் கட்சிக்கு உள்ளது என ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் அநுருத்த பிரதீப் தெரிவித்துள்ளார்.

ரத்தன தேரர் இப்போது பிரதமரினதும், ஜனாதிபதியினதும் அனுதாபங்களைச் சம்பாதித்துக்கொண்டுள்ள போதிலும் அவர் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்தது முற்றுமுழுதாக கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமானதே என்பதை அவரால் மறுக்க முடியாது.

மேலும், ரத்தன தேரர் அண்மையில் பிரதமரைச் சந்தித்து தனது விளக்கத்தை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அந்தச் சந்திப்பு விதிவிலக்காக அமையாது எனவும் அநுருத்த பிரதீப் சுட்டிக்காட்டினார்.