மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் புதிதாக பலகட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள்மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மக்களவைத் தேர்தல், கிளைஅளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் அளவில் இருந்துபல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசென்று, அந்த திட்டங்களால் தமிழக மக்கள் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் புதிதாக மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. தமிழகத்தில் பாஜக முதன்மையான கட்சியாக வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதால் தமிழகத்துக்கு நன்மையா, கெடுதலா என்பது இனிதான் தெரியவரும். நல்ல முறையில் நிர்வாகம் செய்ய அவர் முன்வர வேண்டும் என தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பது ஸ்டாலினின் கற்பனை. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடும். ஆனால், அவர்களால் தனித்துப் போட்டியிட முடியாது.
பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜக முதல் நிலைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் தெளிவான முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.