அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் பெரிய அளவில்பலன் தரவில்லை என்று, என்சிஇஆர்டி நடத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த மாற்றுதிட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 86 ஆயிரம் பேரின் அடிப்படை கற்றல் திறன் தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த செப்டம்பரில் ஓர் ஆய்வு நடத்தியது. அதில், தமிழகத்தில் 3-ம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ், கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், தமிழக மாணவர்களின் கற்றல் பின்தங்கி இருப்பது தெரியவந்தது.
தமிழகத்தில் 20 சதவீதம் மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்துகொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால்தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தைகூட சரியாக சொல்ல முடியவில்லை.
அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கியுள்ளது. அதேநேரம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மற்ற தென் மாநிலங்களில் 40-45 சதவீத மாணவர்களால் தாய்மொழியை நன்குபடிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்தது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 3-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு முழுமையாக வரவில்லை. இதனால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய பிரிட்ஜ் கோர்ஸ், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும், தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல்பின்தங்கியே இருப்பதால், இத்திட்டங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை என்ற கருத்து உள்ளது.
இதுகுறித்து சிறார் எழுத்தாளர் விழியன் கூறியதாவது: இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் எந்த அளவுக்கு மாணவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தற்போதைய என்சிஇஆர்டி ஆய்வு அதற்கு போதாது. கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, உலகம் முழுவதிலுமே மாணவர்களிடம் எண்ணறிவு, எழுத்தறிவில் பெரும் பின்னடைவு நீடிக்கிறது. அதற்கு தமிழகமும் விலக்கு அல்ல.
ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதுவே முழுமையான தீர்வாகாது. பள்ளிகளில் பெரும்பாலும் கற்பித்தல் அல்லாத செயல்களிலேயே ஆசிரியர்களின் நேரம் செலவாகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சியும் போதுமானதாக இல்லை. குழந்தைகளின் மனநிலை, கற்கும் வேகம், புதிய முயற்சிகள் குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடுவது அவசியம்.
குழந்தைகளிடம் மொழி அறிவு,எண்ணறிவை மேம்படுத்த மாற்றுஉத்திகளை பயன்படுத்த வேண்டும். பள்ளி நூலகங்கள் இதற்கு உதவியாக இருக்கும். பள்ளிகளில் பல்வேறு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்த பயிற்சியும், முழு சுதந்திரமும் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா பரவலால் 2 ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை உடனே சரிசெய்ய முடியாது. அடிப்படை கற்றலை மேம்படுத்தவே எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பரவலாக வரவேற்பு உள்ளது.
இத்திட்டத்துக்கு உறுதுணையாக, 1 முதல் 5-ம் வகுப்புகளில், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி மையங்களில் தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவில் முழுமை பெறுவார்கள்” என்று தெரிவித்தனர். கரோனா காலத்துக்கு பிறகு, உலகம் முழுவதிலுமே மாணவர்களிடம் பெரும் பின்னடைவு நீடிக்கிறது.