உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய கொள்கை உருவாக்கப்படும்

108 0

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும். அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் செவ்வாய்கிழமை (டிச.13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உணவுப் பற்றாக்குறை எனும் சவாலுக்கு நாம் இன்று முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, விவசாயமும் பின்னடைவைக் கண்டுள்ளது. அதேபோன்று 2023இல் உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவிருப்பதாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவு விலை அதிகரிக்கும் என்பதால் அனைத்து மக்களாலும் உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இது எமது நாட்டுக்கு மட்டும் உரித்தான விடயமல்ல. ஐரோப்பாவிலும் இந்நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முகம் கொடுப்பதற்கு ஏதுவாகவே உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

உணவைப் பாதுகாப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்திலுள்ள எமது முதலாவது இலக்கு ஆகும். உணவைப் பாதுகாப்பதன் மூலம் எமது மக்களை பசியிலிருந்து நாம் பாதுகாக்க முடியும்.

அத்துடன் போஷாக்கின்மையையும்  இல்லாதொழிக்கலாம். எனவே தற்போதுள்ள பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எமக்கு பணியாற்ற வேண்டியுள்ளது. இதற்கு பல மறுசீரமைப்புகள் தேவை.

எனவே இதனடிப்படையில் முதற்கட்டமாக கிராம மட்டத்தில் உணவைப் பெற்றுக்கொடுக்க உள்ளோம். நகரங்களிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே இவர்களுக்கு உணவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சில கிராமங்களில், சிறு நகரங்களில், கொழும்பு போன்ற நகர்புறங்களில் உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அடிப்படை மட்டங்களில்  ஐந்து உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரதேச செயலகத்தில் பெருமளவிலான உத்தியோகத்தர்களும் இணைப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக திணைக்களங்களில் புறம்பானதொரு அதிகாரிகள் குழுவும் பணியாற்றி வருகின்றது.

அதற்கு எவ்வாறு நாம் முகம்கொடுப்பது என்பதே இங்குள்ள முதலாவது பிரச்சினையாகும். அதற்காகதான் இக்கூட்டு பொறிமுறையை நாம் உருவாக்கினோம்.

இது தேசிய மட்டம் முதல் பிரதேச செயலாளர் மட்டத்திற்கூடாக கிராமிய மட்டம் வரை செயலாற்றுகின்றது. பிரதேச செயலகத்திலுள்ள உத்தியோகத்தர்கள் கிராமிய மட்டத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஐவருடன் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பர். அதேபோன்று இது மாவட்ட மட்டத்திலும் முன்னெடுக்கப்படும்.

பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பணிகளுக்கு பிரதேச செயலாளரும், மாவட்ட மட்டத்துக்குற்பட்ட பணிகளுக்கு மாவட்டச் செயலாளரும் பொறுப்பாக இருப்பர்.

மேலும் ஆளுநர் உள்ளிட்ட ஏனையோர் மாகாண மட்டத்துக்குப் பொறுப்பான வேலைதிட்டத்தை முன்னெடுத்துச் செல்வர்.

ஆகக்கூடிய உற்பத்தியை பெறுவதே நாம் இங்கு முதலில் செய்ய வேண்டியதாகும். உற்பத்தியை பெறுவது மட்டும் போதாது. உணவை விலங்குகளிடமிருந்து மட்டுமன்றி வீண்விரயமாதலில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்த்தாக அதனை முறையாக களஞ்சியப்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை உரிய விலையில் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற முறையான பொறிமுறைக்கூடாக நாம் இவற்றைச் செயற்படுத்த வேண்டும். இவற்றை செயற்படுத்திக் கொண்டு செல்லும் வழியில் நாம் மேலும் பல புதிய முறைமைகளை இதில் இணைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் பசியைப் போக்குங்கள். எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது. எனினும் இங்கு நடப்பது ஒன்று நாம் செய்வது இன்னுமொன்று.

எனவே அனைத்தையும் இணைத்துக்கொண்டு நாம் வேலைதிட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் இவ்வேலைத்திட்டங்களை எமது திட்டத்துக்கமைய முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.

இதன் பிரதான பொறிமுறை, பிரதேச மட்டத்திலுள்ள மீளாய்வு ஆலோசனைக் குழுவிலேயே தங்கியுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 222 தொகுதிகளையும் அதன் தவிசாளர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களிடம் பொறுப்பளியுங்கள்.

அவர்களுக்கு மேலதிகமாக அரச உத்தியோகத்தர்கள், தனியார்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கும் இதன் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுங்கள். இவற்றை பொறுப்பேற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலும் குறைவாக இருந்தால் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இதற்கான பொறுப்பை பெற்றுக் கொடுங்கள்.

அடிமட்டத்தில் நடப்பதை இங்கே அறிக்கையிடுங்கள். இதற்காக பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்கள், மாவட்ட மட்ட அதிகாரிகள், சனச போன்ற பொதுமக்கள் அமைப்பு மற்றும் தனியார்துறை ஆகியவற்றை இணைத்துக்கொள்ளுங்கள். கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடப்பது என்ன என்பது தொடர்பான தரவுகளை எமக்குப் பெற்றுத் தாருங்கள். பின்னர் தத்தமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடப்பதை மீளாய்வு செய்யுங்கள்.

கிராமிய பொருளாதாரத்தை மையமாகக்கொண்டு, குறிப்பாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பான தரவுகளை நாம் சேகரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிரதேச செயலாளர் பிரிவு, அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டம் என நாம் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எனவே அனைவரையும் அழைத்து, இது தொடர்பில் மீளாய்வு செய்து அது தொடர்பில் தேவையானவற்றையும் ஆலோசனைகளையும் மத்திய அரசாங்கத்துக்குப் பெற்றுத் தாருங்கள். அப்போது இணைப்புக் குழு என்ற அடிப்படையில் தேசிய மட்டத்திலான தீர்மானங்களை எம்மால் முன்னெடுக்க முடியும்.

முதலில் குழு ரீதியான தலைமைத்துவத்தை கையில் எடுங்கள். அதன் பின்னர் வழிகாட்டும் வகையில் செயற்படுங்கள். கிராம மட்டத்தில்  எவ்வாறான விவசாயம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனைத் தொடர்ந்து இளம் விவசாயிகளுக்கு முன் வருவதற்கு இடமளியுங்கள். விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். இந்த பொறிமுறையூடாக எம்மால் அதை ஆரம்பிக்க முடியும். எமக்கு போட்டித்தன்மையுடைய விவசாயம், நவீனமயப்படுத்தப்பட்ட விவசாயம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயம் என்பன அவசியம்.

எனினும் இன்னும் நாம் அந்நிலையை  அடையவில்லை. அதற்காக முதலில் நாம் கிராமிய மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு நன்கொடை தேவை மற்றும் அப்பிரதேசத்தில் நிலவும் போஷாக்கின்மை போன்ற விடயங்களை புரிந்து கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிகளையும் இல்வேலைத்திட்டத்திற்கூடாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நகர்புறங்களிலும் உணவு பற்றாக்குறை உண்டு. குறிப்பாக கொழும்பை எடுத்துக் கொண்டால் வடக்கு பகுதியில் உணவுப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுக் குறித்து ஆராய வேண்டும். உணவைப் பெற்றக் கொடுப்பதற்காக ‘கம்மியூனிட்டி கிச்சன்’ போன்ற பல தன்னார்வு குழுக்கள் முன்வந்துள்ளன. மேலும் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள விகாரைகள், முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு நேரில் சென்று உரையாடுங்கள். பின்னர் தேவைக் குறித்து மீளாய்வு செய்யுங்கள்.

அரச மற்றும் தனியார் துறையினரையும் பிரதேச செயலாளர்களுடன் பேச்சு நடத்துமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் தயாராக உள்ளன. அவற்றை எனது செயலாளரிடமிருந்தோ அல்லது பிரதமரின் செயலாளரிடமிருந்தோ பெற்றுக் கொள்ளுங்கள். இம்மாதமே பிரதேச செயலாளர்களைச் சந்தித்து களத்தில் இறங்குங்கள். தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னர் இங்கே வாருங்கள்.

முதலில் உணவு பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிவோம். பின்னர் உங்கள் ஆலோசனைகளுக்கேற்ப இதற்கான தீர்வகளைக் கண்டு, படிப்படியாக முன்னேறுவோம். பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர்களுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்துமாறும் அடுத்த வாரமளவில் பொறுப்பெடுத்தவர்கள், இன்னமும் பொறுப்பெடுக்காதவர்கள், வேலைகளை ஆரம்பித்தவர்கள் போன்றோரின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறும் நான் பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.