கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடனான பல்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான திசையில் பயணிக்க வேண்டியது அவசியமானதாகும் என்று மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கணக்காய்வாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பரிஸ் கிளப், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடல்களில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளோம்.
மத்திய வங்கி இந்த நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பான செய்திகளாகும். எந்த வகையில் நாம் இந்த கலந்துரையாடல்களை இடைநிறுத்தவில்லை.
இந்த கலந்துரையாடல்களை முழுமையாக நிறைவு செய்வதற்கான முயற்சிகளிலேயே நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஜனவரி மாதமளவில் இதனை நிறைவு செய்து கொள்ள முடியும் என்று நாம் இதற்கு முன்னரும் தெரிவித்திருக்கின்றோம் அல்லவா? இந்த நிலைப்பாட்டிலிருந்தும் , அதற்கான முயற்சிகளிலிருந்தும் நாம் வெளியேறவில்லை.
இம்மாதம் இதனை நிறைவு செய்து கொள்ள முடியவில்லை எனில் , ஜனவரியில் அதனை செய்து கொள்ள முடியும். கடன் வழங்குனர்களிடம் உறுதிப்பாட்டினைப் பெற்றுக் கொண்டு அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்க வேண்டும். அதற்கமைய சர்வ பொருளாதார கொள்கையொன்றை முன்வைத்து குறுகிய காலத்திற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
அதே போன்று நீண்ட கால மறுசீரமைப்பு மற்றும் சரியான கொள்கை சட்டகத்தின் ஊடாகவும் இதனை எம்மால் செய்ய முடியும். நாட்டை ஸ்திரப்படுத்தும் பாதையில் நாம் பயணிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதனை முழுமையாக நிறைவடையச் செய்ய வேண்டும். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நாம் நீண்ட மற்றும் குறுகிய கால மறுசீரமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.