சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் ஜனவரி மாதமல்ல, மார்ச் மாதம் கூட பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது. கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை இன்றும் இழுபறி நிலையில் தான் உள்ளது. சர்வதேச பிணைமுறி கடன் மறுசீரமைப்பு சவால் மிக்கது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் புதன்கிழமை (டிச. 14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒரு பில்லியன் டொலர் நிதியுதவி பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயல்படுத்தாமல் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்,ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ளதுள்ளது,அத்துடன் சர்வதேச பிணைமுறிகள் விநியோகத்திலும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து இருதரப்பு அடிப்படையில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
சர்வதேச பிணைமுறிகள் விநியோகத்தில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மறுசீரமைப்பது சவால் மிக்கது. ஏனெனில் சர்வதேச பிணைமுறிகளில் முதலீட்டாளர்கள், நிதிய முகாமையாளர்கள் மாத்திரம் உள்ளார்கள்.
பிணைமுறிகள் கடனை 35 சதவீதமளவில் இரத்து செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு 40 சதவீதமளவில் தான் தற்போது இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைமுறிகள் கடனை மறுசீரமைக்க வேண்டுமாயின் பிணைமுறிகள் சந்தையில் உள்ள 100 சதவீதமான தரப்பினரது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.
தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என்பதால் தேசிய கடன்களை மறுசீரமைக்க போவதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச பிணைமுறிகள் சந்தை வலியுறுத்தியுள்ளது என்றார்.