தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது.
அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதனை மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற சிவப்புக்கொடியினுள் ஒழிந்திருக்கும் சிங்கள இனவாதக் கட்சியானது சிறிலங்கா சிங்கள நீதிமன்றில் வழக்கொன்றின் ஊடாக வடக்கு, கிழக்கு எனத் தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன. அதேவேளை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கக்கூடாது என்று அரசிலிருக்கும் அமைச்சர்களே குரலெழுப்புகின்றனர். வட மாகாணசபையின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் வட மாகாணசபையால், வட மாகாண நிதியத்திற்கான திட்டவரைபு முன்மொழியப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களது “சுதுமலைப் பிரகடணம்” என்று சுட்டப்படும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பான கொள்கைவிளக்க உரையிற் கூறப்பட்ட விடயங்கள் பின்னாளிற் தமிழினத்தின் அனுபவமானது. அவரது உரைப்பகுதியிலிருந்து, இந்த உடன்படிக்கையின் மூலம் நிரந்தரத்தீர்வு வரும் என்று நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பிசாசு இந்த உடன்படிக்கையை விழுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தமிழீழ மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வைத் தமிழீழத் தனியரசு மட்டும்தான் தரமுடியும் என்பதுதான் எனது கணிப்பும் மாறாத நம்பிக்கையுமாகும்’ என்பதோடு தமிழினத்தின் பாதுகாப்பை இந்தியாவின் கைகளில் அளித்தமையும், அதன் பின்னான இந்தியப் படைகளின் காலமென்பது இருண்டகாலமாகக் கடந்துவிடத் தமிழினம் தனது விடுதலை நோக்கிய பயணத்தில் வீறுடன் தொடர்ந்தது.
அமைதிப்புறா வேடமிட்டு வந்த சந்திரிகா அரசும் தமிழின அழிப்பில் எந்த சிங்களத் தலைமைக்கும் தாம் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாபெரும் புலப்பெயர்வையும் இனஅழிப்பையும் மேற்கொண்டதை வரலாறு பதிவுசெய்துகொண்டது. பின்னாளில் சிறிலங்காப்படைகள் தீச்சுவாலையை மூட்டியதன் விளைவாக படைவலுவிலான முதுகெலும்பு முறிந்த நிலையில், புலிகளது படைவலு மேலோங்கியிருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைப் படலத்தைக் கையிலெடுத்தனர்.
இம்முறை நோர்வே சமாதான முன்னெடுப்பில் களமிறங்கிச் செயற்படலானது. சிறிலங்கா அரசானது சமாதானச் செயற்பாடுகளை நேர்மையாகக் கையாளாது என்பதைத் குறிப்பிட்டவாறு தமிழர் தலைமை சமாதானத்தை நோக்கிய தனது மெய்நிலையை வெளிப்படுத்தியதோடு, அதனைக் கடைப்பிடித்துச் செயற்படலாயிற்று. ஆனால், மறுவளமாகச் சிறிலங்கா அரசதரப்பும் இந்திய – மேற்குலகக் கூட்டும் சமாதானத்தை தமிழினத்தின் இருப்பை தகர்க்கும் பொறியாகப் பயன்படுத்தியதோடு, படைவலுச் சமநிலையை மாற்றியமைத்ததோடு, புலிகள் மீதான தடையையும் ஏற்படுத்திச் சமாதான முன்னெடுப்புகளைப் பலவீனப்படுத்தியமையைத் தமிழினம் மனம்கொள்ள வேண்டும். இறுதியாக 2006ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிட்டு மாபெரும் தமிழின அழிப்போடு 2009இல் ஆயுதப்போர் மௌனித்துவிடத் தமிழின அழிப்புத்தொடர்கிறது.
தமிழின அழிப்பின் விளைவாக ஊதிப்பெருத்துவிட்ட படைத்துறை செலவினங்களோடு, போர் ஓய்ந்துவிட்ட 13 ஆண்டுகளிற் ஊழல்களும் சேர்ந்துவிட நாட்டில் பெரும் பொருண்மிய நெருக்கடி சூழ்ந்துகொண்டது. அந்தச் சூழலில் ஏற்பட்ட சிங்கள மக்களின் எழுச்சியின் விளைவாக, வீழ்த்த முடியாத முடிசூடா மன்னனாக வந்த கோத்தபாய ராயபக்ச அரசுத் தலைவர் பதவியிலிருந்து தப்பியோட, நாடாளுமன்றுக்குத் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவாகி ஒரே ஒரு இருக்கையை மட்டும் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க(ஐ.தே.க) அரசுத்தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவைப் பெருமளவிற் சார்ந்திருந்த ராயபக்சாக்களுக்கு மாற்றாக மேற்கின் சார்புநிலையாளரான ரணில் விக்கிரமசிங்க அரசுத் தலைவராகியுள்ளமை மேற்குலகிற்குச் சாதகமாகியுள்ளது. இந்தச் சூழலைத் தக்கவைக்கத் தமிழர்கள் மீண்டும் பலியிடப்படக்கூடிய வாய்ப்பே தென்படுகிறது. அமெரிக்கா முதல் யப்பான் என மேற்கிலிருந்து கீழ்த்திசைவரையான இராயதந்திரிகளின் வருகை ஒன்றும் புதிதல்ல. ஆனாற் தமிழினம் உற்றுநோக்க வேண்டிய வரவாக இருப்பவர் யாரென்றால் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்கைம் ஆவார். சனாதிபதிக்கான காலநிலை ஆலோசகர் என்ற போர்வையில் எரிக் சொல்கைம் அவர்கள் களமிறங்கியுள்ளதை எச்சரிக்கை மணியாகவே கொள்ளவேண்டியுள்ளமை தமிழினத்தின் பட்டறிவாகும்.
சமாதானத் தூதுவராக அவர் ஆற்றிய பணியின் பயனாகத் தமிழினம் எந்தவொரு அனுகூலத்தையும் பெறவில்லை என்பது உலகறிந்த உண்மை. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சமாதானப் பொறியினுள் இழுத்துவிடப்பட்டதன் விளைவாக நடைமுறை அரசைக்கொண்டிருந்த தமிழர்தேசம் தனி அரசுக்கே உரித்தான பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளோடு உருப்பெற்றிருந்த தாயகம் சிதைவடைந்ததோடு, மாபெரும் இனஅழிப்பையும் சந்தித்ததோடு, அது முள்ளிவாய்காலில் தரித்துவிடப் 13ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
13 ஆண்டுகளில் இலங்கையானது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகள், குறிப்பாகக் கோத்தபாய ராயபக்சவினது ஆட்சிக்காலம் பெரும் பொருண்மியச் சரிவுடன் கூடிய இன்னல் நிறைந்தகாலமாக மாறியது. இக்காலத்திற் புலம்பெயர் இலங்கையர் என்ற சொல்லாடலோடு தமிழர்களது பொருண்மிய முதலீடுகளை கவரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. எரிக் சொல்கைம் அவர்கள் கூட புலத்திலே உள்ள தமிழர்களிடம் அப்படியானதொரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே தமிழினம் எரிக் சொல்கைம் அவர்களது மாறுவேடத்திலான மீள்வருகை குறித்து விழிப்புடன் இருத்தல் அவசியமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் முதற் பாகத்தில் தமிழரது ஆயுதபலத்தை சிதைத்தழித்ததுபோல், தமிழினத்தின் அரசியற் கோட்பாட்டையும் இல்லாதொழிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலோடு முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகத்திற் களமிறங்கியுள்ளாரா(?) என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனென்றால், எரிக் சொல்கைம் அவர்கள் இந்தப் 13ஆண்டுகளில் சமாதானத்தூதுவராக இருந்தவர் என்றவகையிலே, தனது பணிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்துப் பேசியுள்ளாரா? தமிழின அழிப்புக் குறித்து கவலையையாவது தெரிவித்துள்ளாரா? காணாமற்போன தமிழர்கள் மற்றும் கையளிக்கப்பட்ட சிறுவர்களுட்படப் 13 ஆண்டுகளாகியும் விடையறிய முடியாதிருக்கும் நிலைகுறித்து அவரது நிலைப்பாட்டை விளக்கியுள்ளாரா? சேர்ந்து வாழ முயற்சியுங்கள் என்று சொன்னதைத் தவிர, தமிழினத்தின் அழிவுக்கு ஒருவகையில் தானும் கரணியமானவர் என்ற சிந்தனையின்றி சிறிலங்கா அரசியல்வாதிகள் போலவே பேசும் எரிக் சொல்கைம் அவர்களது வருகை ஐயத்திற்குரியதே. அது இரண்டாம் முள்ளிவாய்க்காலில் கொண்டு சென்றுவிடும் ஆபத்திற்குரியதாகவே நோக்க வேண்டியுள்ளது.
தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டும், விடுதலைக்காக விதைத்துவிட்டும், கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கென்றே தெரியாது தேடியலைந்துகொண்டிருப்பது அரசியல்வாதிகளல்ல. அப்பாவி மக்களே. அந்த மக்களுக்கு அரசியற் களநிலவர உண்மைநிலை தெரியவேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் தமிழினத்தின் எந்தவொரு தரப்பும், தமிழரது அரசியற்தீர்வு தொடர்பான விடயங்களை மூடிய கதவினுள் பேசும்நிலை மாற்றப்பட வேண்டும். வெளிப்படையான அணுகுமுறைகள் மட்டுமே இன்றைய தேவையாகும். அதனூடாக மட்டுமே இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தமிழினம்; தவிர்க்கமுடியும்.
நன்றி
மா.பு.பாஸ்கரன்
(ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் ‘கார்த்திகைத் தீபம்’ நவம்பர் 2022, இதழ் 9இல் வெளியான ‘முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?’ கட்டுரையைக் குறியீடு இணையத்தில் பிரசுரித்துள்ளோம்)