தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாவலப்பிட்டி மற்றும் கினிகத்தேனை- பிளக்வோட்டர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சந்தித்த குறித்த சந்தேகநபர், மாலைத்தீவில் கட்டப்படும் ஹோட்டல்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிலில் மாதம் 1 இலட்சத்து 93ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதற்காக தரகருக்கு 30,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும் என தெரிவித்து, 197 தொழிலாளர்களிடம் சந்தேகநபர் நிதி சேகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த சந்தேகநபர், நவம்பர் 15ஆம் திகதி மாலைத்தீவுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அதற்கான மருத்துவ பரிசோதனைக்கு 12,500 ரூபாய் தொழிலாளிகளிடம் வசூலித்துள்ளார்.
அத்துடன் அவர்களை இரத்மலைனை பகுதியிலுள்ள வைத்திய மத்திய நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொடுத்த பின்னர், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும் உறவினர்களிடம் கடன்வாங்கியே சந்தேகநபருக்கு 42,500 ரூபாயை ஒவ்வொருவரும் செலுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.