மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பதற்கு முன்னர் அவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பில் இராணுவ முகாம் ஊடாக பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக இல்லாதொழிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் விருப்பத்துடன் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை, 80 சதவீதமான மாணவர்கள் பலவந்தமான முறையில் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபடாவிட்டால் மாணவர் சங்கங்களினால் பகிடிவதை மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க முன்னர் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மாத காலம் இராணுவ முகாம் ஊடாக ஒழுக்கம் தொடர்பான பயிற்சி வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் தற்போது ஒழுக்கம் என்பதொன்று கிடையாது.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஒரு தரப்பினர் பல்கலைக்கழக மாணவர்களை தவறாக வழிநடத் துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். பல்கலைக்கழகங்களை மறுசீரமைக்க முறையாக செயற்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி,கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை வேறுப்படுத்தாமல் ஒரு அமைச்சு கட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது.தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை மக்கள் விடுதலை முன்னணியினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.மக்களாணையை பெற வேண்டுமானால் மக்கள் விடுதலை முன்னணியினர் முதலில் ஒழுக்கமாக செயற்பட வேண்டும் என்றார்.