இந்திய – சீன எல்லையில் தற்போது நிலைமை சீராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “நான் புரிந்துகொண்டதன்படி, இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் தற்போது நிலைமை சீராக உள்ளது. எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சீன ராணுவம் எந்த பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எல்லையில் தற்போது நிலைமை தற்போது சீராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதி நடந்த மோதலுக்குப் பிறகு சீனா அளிக்கும் முதல் விளக்கம் இது.