ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள நாற்காலி, காபி இயந்திரம், ப்ரொஜெக்டர் போன்றவற்றை ஏலம் விட எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது அந்நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. ட்விட்டர் அலுவலக நிர்வாகம் மற்றும் வலைதளம் என அவர் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஏலம் வரும் ஜனவரி வாக்கில் நடைபெறும் எனத் தெரிகிறது. மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏலத்தை முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளது. 25 முதல் 50 டாலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பறவை, ஒரு ப்ரொஜெக்டர், ஐமேக் டிஸ்பிளே, காபி இயந்திரங்கள், நாற்காலிகள், மற்றும் பிரிட்ஜ், பிட்சா மேக்கர் போன்ற சமையலறைப் பொருட்கள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என மஸ்க், ட்விட்டர் நிறுவன குழுவினரிடம் சொல்லி உள்ளதாக தகவல். அவர்களும் நிறுவனத்தின் கிளவுட் சேவை தொடங்கி செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.