பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி கிராமத்தில், ஆதி திராவிடர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழ்நாடு ஹரிஜன் நலத் திட்டத்துக்காக நிலம் கையகபடுத்தும் சட்டத்தின் கீழ் 2.59 ஹெக்டேர் நிலத்தை கையகபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நில உரிமையாளர்களான ரங்கராஜன் மற்றும் சகுந்தலா ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “நிலம் கையகப்படுத்த குறிப்பிட்டுள்ள நிலம் சதுப்பு நிலம். இங்கு எந்த கட்டிடமும் கட்ட முடியாது. நிலம் கையகப்படுத்தும் முன் தங்கள் தரப்பு கருத்துகளை கேட்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், தங்களுக்கு சதுப்பு நிலம் தான் வேண்டும் என பயனாளிகள் விரும்புவதாகவும், அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தாசில்தாரின் அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்காமல், நில உரிமையாளர்களுக்கு கருத்து தெரிவிக்க அவகாசமும் வழங்காமல், நிலத்தை கையகப்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நிலம் கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.மேலும், பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.