மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்

109 0

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நிர்பயா நிதி மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொத்தம் 25 ஆயிரத்து 474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவிகளுக்கு ஒருமாதத்துக்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரிநாப்கின்கள் வழங்கப்படும். அதேபோல் பள்ளிகளில், மாணவிகளின்அவசரத் தேவைக்கு கூடுதலாக 2 மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும்.

அந்த வகையில் ஒரு வருடத்துக்கு 26.59 லட்சம் சானிட்டரின் நாப்கின்கள் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது வரும் 3 ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் மேயர் பிரியா இத்திட்டத்தை தொடங்கி வைத்து, நாப்கின்அலமாரிகளை பள்ளி தலைமைஆசிரியர்களிடமும், சானிட்டரி நாப்கின்களை மாணவிகளிடமும் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதார நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி, கல்வி துணைஆணையர் டி.சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.