2023 ஆம் ஆண்டு “பட்ஜெட்டில்” பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு பாராளுமன்றில் ஆரவாரமெதுவுமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ் தரப்பு கட்சியினர் உள்ளடங்கலாக பத்துப் பேர் மட்டும் எதிராக வாக்களிக்க மீதிப்பேரில் சிலர் சாட்டுக்கு வெளிநடப்புச் செய்தும் பெரும்பாலானோர் ஆதரவாகவும் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.வெளியேறியோரும் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள் என்பதுதான் பொருள்.
நாட்டின் அரசியல் ஸ்திரம், பொருளாதார மேம்பாடு என்பவற்றை விட, தமிழர்களின் நிலப்பகுதி ஆக்கிரமிப்பும் அங்கு பெளத்த விஸ்தரிப்பும் சிலருக்கு அமைச்சுப் பதவியும் மிக முக்கியமானவை என்ற காரணத்தால் அதீத பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகள் பற்றி எந்தக் கவலையுமில்லாது ஆதரவளித்து இதை நிறைவேற்றியுள்ளார்கள். இதில் பாதுகாப்புக்காக (இராணுவம்,கடற்படை,விமானப்படை .) 41ஆயிரம்…கோடி ரூபாவும் பொது பாதுகாப்புக்கென (பொலிஸ்) 12.9 ஆயிரம் கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 2021 வருடத்தை விட இது 14 சதவீதம் அதிகமாகும்.
யுத்தம் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.ஆண்டு தோறும் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டு விரயமாக்கப்பட்டுவரும் நிதி ஒதுக்கீடு குறைந்தபாடில்லை.எந்தக் கூச்சமும் இன்றி நாடு இன்று பங்களாதேஷ் வரையிலும் சென்று கையேந்தும் இழி நிலையில் உள்ளது.இந்த வங்குரோத்து தன இலட்சணத்தில் பாதுகாப்புக்கென பெருந்தொகை நிதி வருடம்தோறும் எதுவித குறைப்பும் இன்றி விழுங்கப்பட்டு வருகின்றது.சர்வதேச அளவில் பல்கலைக்கழக கல்விமான்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்துள்ளனர்.எதனையும் இந்த அரசு காதில் வாங்கியதாக இல்லை.பிரித்தானிய பாராளுமன்ற ஆளும்கட்சி உறுப்பினர் எலியட் கோல் பர்னாலா அவர்கள் இலங்கை தொடர்பாக குறிப்பிடுகையில், இராணுவச் செலவினங்களை குறைக்க ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொள்ளவேண்டுமெனவும் இராணுவம் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் பொருளாதார சீரழிவை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவியைப் பெற வேண்டுமானால் பாதுகாப்பு நிதியாக வருடாந்தம் செலவிடும் 1.86 பில்லியன் ரூபா குறைக்கப்படவேண்டுமெனவும் கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.
சரத் பொன்செகா பாதுகாப்பு படையினருக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் குழப்பமடைய வேண்டியதில்லையெனவும் எந்தவகையிலும் பாதுகாப்புப்படை தயார் நிலையில் இருப்பது அவசியம் எனவும் நியாயம் கற்பித்திருந்தார்.ஆசியாவில் சிங்கப்பூரிலேயே பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்று சில தென் கிழக்காசிய நாடுகளிலும் ஒதுக்கப்படுவதாகவும் இலங்கையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு வக்காளத்து வாங்கியிருந்தார்.
சிங்கப்பூரானது மனித உரிமைகளைப் பேணுவதிலும் மக்கள் நல மேம்பாட்டை மிக உன்னத நிலையிலும் வைத்திருக்கும் ஓர் நாடு.நிதி ஒதுக்கீட்டுக்குத் தேவையான நிதி வளத்தையும் கொண்ட வளர்ச்சியடைந்த ஓர் நாடு.மயானங்களை கிளறி மண்டையோடுகளை பிளக்கும் காட்டுமிராண்டிகள் அல்லாத ஓர் நாடு, சொந்த குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கே இராணுவ முகாம்களையும் விகாரைகளையும் அமைத்து மக்களுக்கு அச்சுறுத்தல் எதையும் விளைவிக்காத ஓர் நாடு என்பதை இவர் மறந்து பேசுகிறார். இனவாதத்தை தூண்டி தானும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்ற கற்பனையில் மிதப்பவர்களில் இவரும் ஒருவர்.பாவம் இவரது மரபணுவில் கலந்துள்ள இனவாத தொழுநோய் எப்பவும் மாறாது போலும்.
படைத்தரப்பினரின் அநாவசிய தலையீடுகள்
இலங்கை படைத்தரப்பானது பாதுகாப்புத்துறை அல்லாத வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டுமென சர்வதேச ரீதியில் அரசியல் ஆய்வாளர்கள் பலராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “படைக் குறைப்பானது நாடு தாங்கிக் கொள்ள முடியாத மற்றொரு கிளர்ச்சியினைத் தூண்டிவிடும் என அரசியல்வாதிகள் அஞ்சுவதாக தெரிகிறது” எனவும் சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக (போக்குவரத்து நெருக்கடிகள், எரிபொருள் விநியோகம், உள்நாட்டு கலகத் தடுப்பு ) இருப்பதினால் இதனால் படைக்குறைப்பு தவிர்க்கப்படுகிறது” எனவும் நம்பப்படுவதாக கூறப்படுகிறது.ஆயினும் இவைகள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத போலியான நியாங்களாகும்.அவ்வாறெனில் தமிழரின் மண்ணில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கள் இருக்கையில் பாலர் கல்வியிலும் ஆக்கிரமித்துள்ள தமிழர் நிலங்களில் பயிர்ச் செய்கையிலும் ராணுவம் ஏன் அநாவசியமாக தலையிடுகிறது? முன்னாள் போராளிகளுக்கு ராணுவம் ஏன் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றது? யார் இவர்களிடம் வீடு கட்ட கேட்டது? இதற்கான செலவுகளுக்கு யார் பொறுப்பு? இராணுவத்திற்கு ஏன் உந்த வேலைகள்.தேவையற்ற வேலைகளில் ஏன் மூக்கை நுழைப்பான் என கேட்க விரும்புகின்றோம்.
இத்தகைய பச்சாத்தாப செயற்பாடுகள் வெறும் போலியானதும் வெறுக்கத்தக்கவையுமாகும்.மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காது ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களில் இராணுவம் நிரந்தரமாகவே நிலைகொள்ளுவதற்கான கபட வேலைகளே மேற்குறித்த செயற்பாடுகள் ஆகும்.பெளத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் அத்துமீறி நிர்மாணிக்கப்படும் புத்த விகாரைகளுக்கும் அத்துமீறி அமைக்கப்படும் சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதற்குமான நிதி ஒதுக்கீடுகள் எங்கிருந்து கிடைக்கின்றன ?
பெரும்பாலான இராணுவ பட்டாலியன்கள் வடக்கிலுள்ள காடுகள், கடலோரங்கள் பகுதியில்தான் குவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் வடக்கில் கடற் பகுதிகளில் இடம்பெற்றுவரும் போதைவஸ்து கடத்தல்கள், கடல்வளச் சூறையாடல்கள்,ஆட்கடத்தல்கள் ஒருபுறமும் தரையில் தினமும் இடம்பெற்று வருகின்ற மக்கள் நல விரோத (வழிப்பறி, சங்கிலி அறுப்பு, கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, வாள்வெட்டு) சம்பவங்கள்,திருட்டுச் சம்பவங்கள் தவிர மரக்கடத்தல், மண்கொள்ளை, வெளியிட மீனவர் அத்துமீறல்கள் போன்ற மானிட அனர்த்த செயற்பாடுகள் போன்றவைகள் இன்னொரு புறமாகவும் தங்குதடையின்றி தொடர்கின்றன. இவற்றில் ஒன்றையாவது இந்த அரசு முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதா? என இந்த அரசைக் கேட்க விரும்புகின்றோம்.
2009 இன் முன்னர் வடக்கில் தனி ஒருவன் சாதித்தவற்றை இப்போது இலட்சம் சிப்பாய்களைக் கொண்டு கட்டுப்படுத்த திராணியற்று தடுமாறுகிறது அரசு. இத்தகைய கையாலாகாத்தன படைகள் இங்கு தேவையா? இதற்கு இவ்வளவு நிதி அவசியமா? இப்பகுதி மக்களை துவக்குமுனையில் அடக்கியாள விரும்பும் இந்த நாடு என்றைக்கும் ஜெயிக்கப் போவதில்லை.இவ்வாறான நாட்டின் மீது மக்கள் எப்படி பற்றுவைக்க முடியும்.தமிழர் மீது பற்றில்லா அரசு தமிழ் மக்களின் அரசின் மீதான பற்றினை என்றும் எதிர்பார்க்கமுடியாது.அது சாத்தியமும் அல்ல.
வட-கிழக்குப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களின் நிலைத்திருப்புக்கு பெரும் ஆபத்தான ஒரு நிதி ஒதுக்கீடாகவே பாதுகாப்புக்கான இந்நிதி ஒதுக்கீட்டை கருத முடியும்.அபிவிருத்தி இல்லை,வேலை வாய்ப்பில்லை, மக்கள் நிலைத்திருப்புக்கான அச்சுறுத்தல் போன்றன ஏற்படுவதாலேயே தமிழர்கள் ஆஸ்திரேலியா ,கனடா, இந்தியா என புகலிடம்தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் இதுபோன்ற பல ஆபத்தான சம்பவங்கள் கடலில் நடந்தேறியுள்ளன.இது குறித்து இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் யாழ்.பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் வன்னியில் இராணுவத்தினருக்கான நில அளவை போன்ற நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்த்து பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இவ்வாரமும் ஆளுநர் அலுவலகம் முன்பும் வட்டுவாகலிலும் காரைநகரிலும் தமிழர் தரப்பினரால் காணி அளவீட்டுக்கு எதிராக எதிர்ப்புக்கள் காட்டப்பட்டுள்ளன. மக்களுக்கு இராணுவத்துடன் முரண்படுவதே இப்போது வேலையாயிற்று.எவற்றையும் இந்த இனவாத அரசு செவி மடுப்பதாக இல்லை.
ஒருபுறம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தை என பேசிக்கொண்டு மறுபுறமாக இரகசியமாக வடக்கு ஆளூநர் மூலமாக நில ஆக்கிரமிப்பிற்கு இராணுவத்தை தூண்டிவிடும் செயலில் அரசு தலைவர் ஈடுபட்டுள்ளதாக தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார்.அடுத்துவரும் எழுபத்தைந்தாவது (75) சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது தீர்வு காணப்படாதிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறும் ஜனாதிபதி,முன்பு பதின்மூன்று என்றார் இப்போது 1980 களில் குப்பைத்தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை பற்றி புதுக்கதை விட்டுள்ளார். இவரது சுதந்திர தின பரிசு உழுத்துப்போன மாவட்ட அபிவிருத்திச் சபைதான் போலும். இவையெல்லாம் நரித்தனம் என்பதைவிட அயோக்கியத்தனம் என்பதே பொருத்தமானது. பெருந்தொகையான படைகளை மக்கள் குடியிருப்புகளிலும் வளமான பயிர்செய் நிலங்களில் குவித்து வைத்துக்கொண்டு பெருந்தொகை நிதியினை பாதுகாப்புக்கென ஒதுக்கிவிட்டு சுதந்திர தினத்தோடு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எனக்கூறுவது நகைப்புக்கிடமாகவே உள்ளது.அத்தோடு இந்து மதத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டுமாம் எனவும் கதை விடுகிறார். “பட்டமரத்தில் பால்வடிந்த” கதைதான். கோவிலுக்கு பிக்குவின் உடலை எரித்தபோதும் கோணைஸ்வரம் கன்னியா ஆக்கிரமிப்பின் போதும் இந்த ஞானம் எங்கே ஒழிந்து கோண்டதாம்.எல்லாமே அடுத்த ஜனாதிபதி பதவியை இலக்கு வைத்து போடும் தாளங்களே.
வடக்கு அபிவிருத்தி
பலாலி விமானத்தளத்தில் விமானமும் கே.கே.எஸ் துறைமுகத்தில் கப்பலும் ஓட்டப் போகிறார்களாம். கவலைக்கிடமாகவுள்ள ஹம்பாந்தோட்டை,மத்தள விமானத்தள நிலமைகள் சொல்லி மாளாதவை.இந்த இலட்சணத்தில் பலாலியில் விமானமும் கே.கே.எஸ்ஸில் கப்பலும் ஓடும் கதை விந்தையாகவுள்ளது.இப்படிப் பேசிப் பேசி பூச்சாண்டி காட்டியே காலத்தை ஓட்டுவதுதான் இவர்களின் வேலையாயிற்று.
கடந்த ஏழு தசாப்தங்களாக அறவழி பிழைத்து நாட்டில் கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல் என்று நாட்டை சீரழித்து இனவாத தொழு நோயாளிகள் என்ற தீராத பழிச்சொல்லுக்கு முழு ஆட்சியாளர்களும் இரையாகியுள்ளனர்.ரணில்அவர்களும் இதில் விதி விலக்கானவர் அல்ல.எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தின் முன் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்துவிடுவாராம்.பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளை அவதானிக்கையில் இவர் கூறும் சுதந்திர தின விழாவின்போது தமிழ்த்தேசியம் என்ற ஒன்று இல்லாமல் போகும்போலவே படுகிறது.அறநெறி பிழைத்தவர் என்ற தீராத பழிச்சொல்லில் இருந்து ரணில் அவர்கள் தப்பிக்க தயாராக இல்லாதவராகவே அவரது பயணம் உள்ளது போல் தெரிகிறது.
எவ்வாறாயினும் இவ்வாண்டுக்கான பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி இந்த நாட்டின் பாதுகாப்புக்கானது என இவர்கள் தொண்டை கிழிய கத்தினாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில் பூர்வீக தமிழர் நிலங்களை கபளிகரம் செய்து அங்கே விகாரைகளை அமைத்து சிங்கள பெளத்த ராச்சியமாக ஆக்குவதற்கான ஒதுக்கீடே பாதுகாப்பு நிதி என்பதுதான் நிதர்சனம்.
கலாநிதி சூசை ஆனந்தன்