கால்நடை இறப்புக்கான காரணம் வெளியானது

123 0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் 1,660 கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் நோயினால் அல்ல என்றும் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய சீரற்ற வானிநிலை காரணமாக கடந்த 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் உள்ளடங்கலாக 1,660 கால்நடைகள் உயிரிழந்தன.

திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதன்படி, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடைகளின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் வழங்கியுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த கால்நடைகள் நோயினால் உயிரிழக்கவில்லை என்றும் கடும் குளிரினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் உயிரிழந்துள்ளதாகவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.