பல்கலைக்கழகங்களுக்குள் அச்சமின்றி நடமாடக் கூடிய சூழலை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நீதித்துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தாக்கப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்க்கமாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து , அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார.
இந்த நிலைமை தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டது. பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் மிகவும் வன்முறையான வகையில் மனிதபடுகொலைகளில் ஈடுபடும் சில சக்திகளால் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வரலாறு காணப்படுகிறது.
பேராசிரியர் ஸ்டேன்லி விஜேசுந்தர கொழும்புப பல்கலைக்கழகத்திற்குள் கொலை செய்யப்பட்டமை , மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட வரலாறுகளும் எமது நாட்டில் காணப்படுகின்றன.
இந்த வரலாறுகளை மீளப் புதுப்பிக்கும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பிலும், போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்து , பல்கலைக்கழகங்களுக்குள் அச்சமின்றி நடமாடக் கூடிய சூழலை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நீதித்துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.