சீனா, இந்தியா, ஜப்பானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி

125 0

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனரால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனவரி மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மிக்க தரப்பினர் நாம் அல்ல. மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனவரி மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறக்கூடும் என அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஊடாக இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப் பெற்றுக் கொள்ள உள்ளமையுடன் தொடர்புடைய முக்கியத்துவம் மிக்க மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் கடந்த வாரம் இடம்பெற்றது.

நாட்டில் சீன எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி என்பவற்றின் தலைவர்கள் இணைந்து உலக வங்கி தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்தக் சந்திப்பின் போது சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து நேர்மறையான அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.