சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் : பிரதான தரகர் விளக்கமறியல் நீடிப்பு

147 0

கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை மையப்படுத்தி, ஏழை எளியவர்களை ஏமாற்றி இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக  வர்த்தகம்    தொடர்பிலான விசாரணையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாய் என அறியப்படும் பிரதான தரகரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இதற்கான உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்த நிலையில், அவரது விளக்கமறியல் காலம் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக வர்த்தகம்  தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான தரகராக செயற்பட்டதாக கூறப்படும் ‘பாய் ‘ எனும் பெயரால் அறியப்படும் நபர் நீதிமன்றில்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டு  அடையாளஅணிவகுப்புக்கு   உட்படுத்துவதற்காக   இன்று 13 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது அடையாள அணிவகுப்புக்காக  அவர் ஆஜர் செய்யப்பட்ட போதும்,  அடையாளம் காட்ட வேண்டிய சாட்சியாளர் சுகயீனம் காரணமாக மன்றில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம்  திகதிக்கு ஒத்தி வைத்த நீதிவான், சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தையும் 14 நாட்களால் நீடித்தார்.

ஏற்கனவே இந்த  சட்ட விரோத சிறுநீரக  வர்த்தகம்  குறித்த விசாரணைகளுக்காக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.