தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்

134 0

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி நடைபெறவுள்ளதால் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பல தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.

இளைஞர் பிரதிநிதித்துவம்,தேர்தல் கால செலவுகளை குறைப்பது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இளைஞர் பிரநிதித்துவத்தை உள்வாங்குவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

தேர்தல் கால செலவுகளை குறைப்பது தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு சட்டமூலங்களையும் விரைவாக நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் இவ்விரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் அது அடுத்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்லுபடியற்றதாகும்.

ஆகவே தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான இவ்விரு சட்டமூலங்களையும் இயற்ற எதிர்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை இடம்பெறவுள்ளது.

ஆகவே இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும்.

துற்பே தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க மாதாந்தம் சுமார் 55 இலட்சம் ரூபா செலவாகுகிறது,தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது காலத்திற்கு பொருத்தமான செயல்பாடாக அமையும்,ஆகவே இவ்விரு பிரதான சட்டமூலங்கையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.