பல்கலைக்கழகம், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க விசேட செயலணி ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரகலயவிற்கு பின்னரே மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் மீதான தாக்குதலின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினரும், முன்னிலை சோசலிச கட்சியினரும் உள்ளார்கள் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சபையில் அழுத்தமாக குறிப்பிட்டனர்.
அரச பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் அங்கீகாரம் கிடையாது.
ஏனெனில் அந்தளவிற்கு அரச பல்கலைக்கழகங்கள் முறையற்றதாக உள்ளது. ஒருசில பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை வழங்கி அடி,கொலை செய் என குறிப்பிட்டு மாணவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (13) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது,
இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதாவது,
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு,பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரலாற்றில் இது முதல் சம்பவம் அல்ல,பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்ல,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கள ஊழியர்கள் உட்பட அனைவரின் பொது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் சட்ட ஒழுங்கு முறையாக பேணப்படாவிட்டால் பெற்றோர் தமது பிள்ளைகளை பல்கலைகழகத்திற்கு அனுப்பமாட்டார்கள்.
பல்கலைக்கழகம்,உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை ஆக்கிரமித்துள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க விசேட செயலணி ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல,பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.சட்டத்தை முறையாக செயற்படுத்த வேண்டும்.பல்கலைக்கழகத்தில் சட்ட ஒழுங்கு முறையாக பேணப்பட வேண்டும்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு இணையாக பேராதனை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது,இருப்பினும்,நோக்கம் நிறைவேற்றப்படவில்லை,இனியாவது கட்சி பேதங்களின்றி ஒன்றிணைந்து பல்கலைக்கழக கட்டமைப்பை பாதுகாக்க ஒரு நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா,இவ்வாறான சம்பவம் இடம்பெறும் போது மாத்திரம் அவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் காணப்படும் முறையற்ற கேலிக்கூத்தான செயற்பாடுகள் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கிடையாது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் இவ்வாறான சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்ற போது அது குறித்து விசாரணை இடம்பெற்றது,ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.ஆகவே முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மீது தாக்குதல்,பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படும் போது அதற்கு எதிராக அனைவரும் கண்டனம் வெளியிடுகிறார்கள்.முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை முறையாக செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
செயற்படுத்தும் போது ஒருசில அரசியல் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.மே மாதம் 09 ஆம் திகதி சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் செயற்பாடு தொடர்பில் சபையில் உரையாற்றினேன்,இதன்பின்னர் முகப்பு புத்தகத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானேன்.
மே 09 சம்பவத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட ஒருசில பேராசிரியர்கள் மாணவர்களை தூண்டிவிட்டார்கள்.அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தரப்பினர் குழுவாக செயற்படுகிறார்கள்.வீடுகளை தீ வைக்க பேராசிரியர்கள் சென்றார்கள்.அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனிப்பட்ட நிறுவனங்களில் அங்கிகாரம் இல்லை,அந்த அளவிற்கு அரச பல்கலைக்கழகங்கள் முறையற்றதாக உள்ளது.
மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை கொடுத்து ஒருசில பேராசிரியர்கள் அடி,கொலை செய்ய என பேராசிரியர்கள் மாணவர்களிடம் குறிப்பிடுகிறார்கள்.இவ்வாறு சென்றால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக இல்லாமல் போகும் என்றார்.
பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினரும்,முன்னிலை சோசலிச கட்சியினரும் உள்ளார்கள்,ஆகவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சபையில் வலியுறுத்தினார்.