வீட்டுவசதி வாரியத்தில் விற்காத 8 ஆயிரம் வீடுகளை வாடகைக்கு விட திட்டம்

128 0

நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான 4 வார திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை, கோயம்பேடு சி.எம்.டி.ஏ., நகர் ஊரமைப்பு இயக்கக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதனை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்வாணையம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் குஜராத், டெல்லியிலும் பயிற்சிக்காக செல்ல இருக்கின்றனர். இவர்களின் பணி மூலம் அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும். அதேபோல் உரிய அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டும் நபர்களை கண்காணிக்க திட்டமிட்டு இருக்கிறோம். உரிய அனுமதி இல்லாமல் கட்டுவதை முறைப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்போம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜனவரிக்குள் திறக்கப்படும். கட்டிடம் கட்டும்போது விதிகளை மீறுபவர்கள், சரி செய்து கொள்ள ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். நீதிமன்றம் வழி காட்டுதல் அடிப்படையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். கடந்த அரை ஆண்டுகளாக கட்டிட விதிமீறல்களை அனுமதிக்க வில்லை.   வீட்டுவசதி துறை மூலமாக கட்டிய 8 ஆயிரம் வீடுகள் விற்பனை செய்ய முடியாததை, வாடகை திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

அதேபோல் கடந்த சட்ட பேரவை கூட்ட தொடரில் அறிவித்த ஒ.எம்.ஆர்- கிழக்கு கடற்கரை சாலை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் பணிக்கு அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. டெண்டர் எப்போது என விரைவில் அறிவிக்கப்படும்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பணிகள் சிறப்பாகவே செய்து இருக்கிறார். தேர்தல் பணிகள், மக்கள் கோரிக்கை தொடர்பாக செயல்பட்டு இருக்கிறார். அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.