ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி-தமிழ்நாடு திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே 24.11.2022 அன்று 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் 2.12.2022 அன்று ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பரிமாற்றம் செய்யப்பட்டது. நகர்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள்தன்மை மற்றும் தழுவலுடன் கூடிய, குறிப்பாக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் மற்றும் அதன் தொடர்புடைய இடர்களை கையாள்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 30.06.2030 அன்று நிறைவுபெறும்.