“தேசத்தின் குரல்” நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்!

614 0

”எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.” என தமிழீழத் தேசியத்தலைவர் பிராபாகரன் அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்த வெளியீட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  சிந்தனை வடிவம், இலட்சியம், அரசியல் கொள்கை போன்றவற்றை வகுத்துகொடுத்த பிதாமகனாக “தேசத்தின் குரல்“ அன்ரன் பாலசிங்கம் விளங்கினார்.

ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக விளங்கினார்.ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தினார்.

சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய்களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப்பணிகள் என உற்சாகமாக இருந்தார்.

‘தேசத்தின் குரல்’ என மகுடம் சூட்டப்பட் டுள்ள அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல்வேறு வடிவில் உலகிற்கு அறியப்பட்டவர். ஒரு ஊடகவிய லாளராக, ஒரு படைப்பாளியாக, ஒரு தத்துவ ஆசிரியராக, ஒரு இராஜதந்திரியாக, ஒரு விடுதலை அமைப்பின் ஆலோசகராக, இவையாவற்றிற்கும் மேம்பட்டதாக ஒரு பண்பட்ட மனிதராக அவர் அடையாளம் காணப்பட்டவர். இதுவே அவரை ‘தேசத்தின் குரல்’ என்ற உயர் நிலைக்கு உயர்த்தியது.

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம் தேசத்திற்கு விட்டுச் சென்ற சொத்து தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுப் பதிவான “போரும் சமாதானமும்” என்னும் நூலாகும். விடுதலைப்புலிகள் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறும் இந்நூலுடன் அவரின் ‘விடுதலை’ மற்றும் அவரின் பாரியார் அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது கணவரின் ஒத்துழைப்புடன் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்பன தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எம்மை விட்டு பிரிந்துசென்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்  கூறியதே நினைவில் வருகிறது. ”பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்”.